East

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) புதிய செயலக கட்டட அடிக்கல் நடும் நிகழ்வு

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிழக்கில் மாகாணத்தில் சமூக சேவை மேற்கொள்வதையே இலக்காகக் கொண்டு
1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் புதிய செயலக (EFO) கட்டடத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு ஒன்றியத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம். நஸீர் தலைமையில் நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பிரதேசத்தின் முன்னணி கல்விமான்கள், திணைக்களத்தலைவர்கள், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், உயர் பதவிகளில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் எனச் சமூகப் பொறுப்புமிக்க முக்கிய ஆளுமைகளை அங்கத்தவர்களாகக் கொண்டு கடந்த 30 வருடங்களுக்கு மேல் EFO நிறுவனம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.

“நட்புறவின் மூலம் மனிதநேயமிக்க சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குதல்” எனும் தூரநோக்கினை அடைவதற்காக இப்பிராந்தியத்தில் இருக்கின்ற வறுமை மற்றும் கஷ்டமான நிலையில் வாழும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை ஒன்றியத்தின் உறுப்பினர்கள் (நண்பர்கள்) மூலமாக நேரடியாக அடையாளம் கண்டு, அவர்களின் கல்வி, கலாசாரம், சமூகம் மற்றும் பொருளாதார நிலைமைகளை விருத்தி செய்வதற்குத் தேவையான முடிந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

EFO உறுப்பினர்கள் மற்றும் கொடையாளர்கள், அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் தாராளமான உதவிகளைப் பெற்று, அந்தந்த குடும்பங்களின் தேவைகளுக்குப் பொருத்தமான வேலைத்திட்டங்களை காலத்துக்கேற்ற விதத்தில் ஒன்றியம் மிக நேர்த்தியாகச் செயற்படுத்தியும் வருகின்றது.

இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம். நஸீர், இன்றைய நாள் எமது EFO வின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். எமது நீண்ட காலக் கனவு, நமது நண்பர்கள் அனைவரினதும் கூட்டு முயற்சியால் இன்று நனவாகியுள்ளது. இன்றைய தினம் எங்களது கிழக்கு நட்புறவு ஒன்றியத்திற்குச் சொந்தமாக ஒரு புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இறைவனின் உதவியுடன் எங்களது அங்கத்தவர்கள், நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் இதனை நிர்மாணிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

நமது இந்தப் புதிய கட்டிடம் “ஒற்றுமையின் சின்னம்” நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று. நமது எதிர்கால சந்ததியினருக்கு EFO விட்டுச்செல்லும் ஒரு வலுவான அடித்தளமே இன்றைய அடிக்கல் நாட்டு விழாவாகும்.

நமது பிரதேசத்தின் அனைத்து சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி பணிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக இது எதிர்காலத்தில் செயற்படும். இந்தக் கட்டிடம் வெறும் செங்கற்களால் ஆனது மட்டுமல்ல; இது எமது அமைப்பின் நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் இலட்சியத்தின் சின்னம்.

இந்த புதிய கட்டிடத்தை குறுகிய காலத்திற்குள் கட்டி முடிக்க நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதற்கு உங்கள் ஒவ்வொருவரின் தொடர்ச்சியான ஆதரவும், பங்களிப்பும் மிகவும் அவசியம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவோம், இந்த புதிய கட்டிடத்தை மிகச்சிறப்பாக கட்டி முடிப்போம்.

இந்த நன்னாளில், நமது ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எம்மை விட்டு பிரிந்த முன்னோடிகளையும், இந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழாவை சாத்தியமாக்கிய EFO நண்பர்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை மனதாரப் பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் பிரதேச செயலாளரும் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான ஏ.எல்.எம். சலீம், சுனாமிக்கு பிற்பட்ட காலத்தில் இருந்து சமூகம் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் EFO நிறுவனமானது கல்வி சார் செயற்பாடுகளில் குறிப்பாக, உயர் தரப் பிரிவில் அனைத்து துறைகளிலும் கற்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றது. கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் இந்த கட்டடம் பயன்படுத்தப்பட வேண்டி இருக்கின்றது. மேலும் இந்த அரசாங்கம் போதைப்பொருள் சம்பந்தமான விடயங்களில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றது. அந்த வகையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீள் புனருத்தாபனம் செய்வதற்கான வேலைத்திட்டத்தையும் இந்தக் கட்டிடத்தில் ஏற்பாடு செய்திருக்கின்றோம். வறுமைக்கோட்டீன் கீழ் வாழ்கின்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், ஏனைய வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்களுக்கான சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டத்தையும் இக்கட்டத்தில் ஆரம்பிக்க இருக்கின்றோம். அத்தோடு, இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களையும் மற்றும் இன்னோரன்ன வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள இருக்கின்றோம். இப்பிராந்தியத்தில் அரச சார்பற்ற நிறுவனமாக செயற்பட்டு வரும் EFO நிறுவனம் சமூகம் சார் பல்வேறு செயற்பாடுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இப்பாரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதனால், இதில் உதவ முடியுமான அன்பளிப்பாளர்கள் பலரது உதவியையும் எதிர்பார்க்கின்றோம். இரண்டு வருடங்களுக்குள் இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதனால், அதற்குள் உதவ முடியுமான அன்பளிப்பாளர்கள் (Doners) தங்களால் முடியுமான எல்லா வகையான உதவிகளையும் வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

54 அங்கத்தவர்களைக் கொண்டு பல்வேறு சமூகம் சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் EFO ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலர் கடந்த காலங்களில் மரணித்துள்ளதனால் 10 உறுப்பினர்களை சென்ற வருடம் புதிதாக இணைத்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் வருடா வருடம் மூன்று மாவட்டங்களில் இருந்தும் 10 தொடக்கம்15 உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளவும் தீர்மானித்துள்ளதும் அதிலும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading