World

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: நாட்டை விட்டு வெளியேறும் அமெரிக்கர்கள்

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று (21) மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், விமான நிலையத்துக்கு ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அண்மைய நாட்களாக சவூதி விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: நாட்டை விட்டு வெளியேறும் அமெரிக்கர்கள் | Attack On A Saudi Airport America Leaving Embassy

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர், தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களில் அமைந்துள்ள விமான நிலையங்களைத் தவிர, ஏனைய விமான நிலையங்கள் தமது தாக்குதல் வரம்புக்குள் இருப்பதாகக் குறிப்பிட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அவற்றுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஏமனில் சவூதி ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஏமன் அரசுப் படைகளுக்கு ஆதரவளிக்கும் அண்டை நாடான சவூதி அரேபியாவைக் குறிவைத்து ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சவூதி அரேபியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்கத் தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading