LocalUp Country

சு.க. உறுப்பினர் ஐ.தே.கவுடன் சங்கமம்- பதுளை மாநகரசபையின் பட்ஜட் இரண்டாவது தடவையும் தோல்வி!

பதுளை மாநகர சபையில் திருத்தங்கள் சகிதம் இரண்டாம் தடவையாகவும் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கையும், மேலதிக ஒரு வாக்கினால் மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

பதுளை மாநகர சபை மண்டபத்தில்  திருத்தங்களுடன் கூடிய இவ்வாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நேற்று இரண்டாவது தடவையாகவும், பதுளை மாநகர மேயர் பிரியந்த அமரசிரியினால், சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, சபை அமர்வில் வாத, விவாதங்கள் இடம்பெற்று, வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு ஆதரவாக 12 உறுப்பினர்களும், எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதனடிப்படையில் ஒரு அதிகப்படியான வாக்கினால், நிதி அறிக்கை தோல்வியுற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்த வகையில் ஆட்சி செய்யும் பதுளை மாநகர சபையின் இவ்வாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கையே, இரண்டாவது முறையாகவும் தோல்வி கண்டதாகும்.

கடந்த 24ந் திகதி, பதுளை மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கையும் ஒருவாக்கினால் தோல்வி கண்டிருந்தது. அதையடுத்து இணக்கப்பாடொன்று ஏற்பட்டு, திருத்தங்கள் சிலவற்றுடன், அவ் அறிக்கை 01-01-2019ல் மீளவும் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் வாக்கெடுப்பில் அவ் அறிக்கையும் கடந்த முறை போன்றே ஒரு வாக்கினால் மீளவும் தோல்வியுற்றது.

ஆளும் கட்சி உறுப்பினரான ஆர்த்தர் சில்வா எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினரும், மக்கள் விடுதலை முன்னணியினருமாக 13 பேர், சமர்ப்பிக்கப்பட்ட நிதி அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஆளும் கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருமாக 12 பேர் மட்டுமே நிதி அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading