செவ்வந்தி விடயத்தில் அரசின் நிலைப்பாடு தவறானது! விமல் வீரவன்ச தெரிவிப்பு!!
வெளிநாட்டில் வைத்து கே.பியைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகுமுறையாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டுக்குக் கொண்டு வரப்படும் குற்றவாளி விமானத்தில் இறங்குவது முதல் எல்லாத் தகவல்களும் மிகவும் சுவாரஷ்யமாக ஊடகங்களில் வெளியாகின்றன. ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இருந்த அரசுகள், இதை விடவும் பயங்கரமான குற்றவாளிகளை வெளிநாட்டில் கைது செய்து அழைத்து வந்துள்ளன. உதாரணம் கே.பி. என்பவரைக் கைது செய்து நாட்டுக்குக் கொண்டு வந்தபோது, அவர் எப்படி வந்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாது.
செவ்வந்தி விடயத்தில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்க்கும்போது, பிரபலமாவதற்கு இதுதான் வழி என்ற தவறான உணர்வு சிறார்கள் மத்தியில் ஏற்படக்கூடும். எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் சென்று பதக்கங்கள் வென்று வரும்போது, அவற்றுக்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.