Local

ஜனாதிபதியை கதிரையில் வைத்துக்கொண்டு  இடைக்கால ஆட்சிக்கு இணங்கப்போவதில்லை!

இன்று எமது நாட்டில் அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி என்றவகையில் இரண்டு பிரதான நெருக்கடிகள் நிலவுகின்றன. இந்த இரண்டுவிதமான நெருக்கடிகளும் தணிந்து உறுதிநிலையடைந்து முன்நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக நாடு பயணித்துக்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடி பற்றி ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் எம்மாலும் இந்நாட்டின் பொருளாதார நிபுணர்களாலும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. நீண்டகாலமாக கடைப்பிடித்துவந்த தவறான கொள்கைகள் கடந்த இரண்டு வருடங்களில்  தீவிரமடைந்து ஒட்டுமொத்த சமூகப் பரப்பிற்கும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி விரிவாக விடயங்களை எடுத்துரைத்தோம். ஆனால் இந்த சனாதிபதி, நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுனர் போன்றே அரசாங்கமும் அது தொடர்பாக எந்தவிதமான கரிசனையும் காட்டாமல்  அவர்களின் தீர்மானங்களை அமுலாக்கி நெருக்கடி தீவிரமடைய இடமளித்தார்கள். இன்று அவையனைத்தினதும் பாதகவிளைவுகளை எமது நாட்டுப் பிரசைகள் எதிர்நோக்கி உள்ளார்கள்.

தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பண்டங்களின் விலைகள் அதிகரித்தமை, அதிகமாக பணத்தை அச்சிட்டு சந்தைக்கு விநியோகித்தமை, டொலரின் பெறுமானத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் போனமை, எரிபொருள் விலையேற்றம் போன்ற விடயங்கள் காரணமாக பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுக்கும் கடுமையான தாக்கம் ஏற்பட்டது.  விவசாயம் தொடர்பில் கடைப்பிடித்த தவறான முட்டாள்த்தனமான கொள்கைகளுக்கு எதிராக கமக்காரர்கள் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். அவை எதையுமே பொருட்படுத்தாமையால் இந்நாட்டின் உணவு விலை அதிகளவில் உயர்வடைந்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதிப் பண்டங்களின் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த ஒட்டுமொத்த பின்னணி காரணமாக குறைந்தபட்சம் மக்களின் அன்றாட உணவுவேளையையும் ஏனைய சேவைகளையும் வழங்குகின்ற அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பினைக்கூட அரசாங்கத்தினால் ஈடேற்ற முடியவில்லை. இதனால் பல அரசியல் இயக்கங்கள் இந்த ஆட்சியாளருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இற்றைவரை வீதியில் இறங்காத இளைஞர் சமுதாயம், நடுத்தர வர்க்கத்தினர் பெருந்தொகையினராக இந்த அரசாங்கத்தையும் ஆட்சியாளரையும் விலகிச் செல்லுமாறு வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் சனாதிபதி, பிரதமரை உள்ளிட்ட இந்த அரசாங்கம் பலவிதமான கபடவிளையாட்டுகளில் ஈடுபட்டு மீண்டும்மீண்டும் தமது கைகளில் அதிகாரத்தை பேணிவர முயற்சிசெய்து வருகின்றது.

அரசியல் உறுதியற்றநிலைமையைத் தணித்துக்கொள்ளாமல் பொருளாதார நெருக்கடியை தீர்த்துக்கொள்ள இயலாது. அரசியல் உறுதியற்றநிலைமையை தணித்துக்கொள்ள பல்வேறு தரப்பினர்கள் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்கள். தனது பிரதமர் பதவியின் கீழேயே இடைக்கால ஆட்சி கட்டியெழுப்பப்பட வேண்டுமென மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த அண்ணன் – தம்பி – மகன்மார்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற ஆட்சியின்போது எவ்வளவு உளரீதியான குழப்பநிலையில் வெறித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பது அவர்களின் கூற்றுக்களிலிருந்து தெட்டத்தெளிவாகின்றது. இந்த நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ளல் தொடர்பில் உளரீதியான சமநிலை கிடையாதென்பது தெளிவாகின்றது. இந்த சனாதிபதி நீங்கி அரசாங்கம் நீங்கி குறுங்கால இடைக்கால ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டுமென பெருந்தொகையான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  குறுகிய காலத்திற்குப் பின்னர் பொதுத்தேர்தலை நடாத்த வாய்ப்பு வழங்க வேண்டும். பார்த்தமாத்திரத்திலேயே தீர்வுக்கான நியாயமான முன்மொழிவாக புலப்பட்டாலும் இடைக்கால அரசாங்கம், கூட்டரசாங்கம், சர்வகட்சி என்றவகையில் அரசாங்கங்கள் கிடையாது. நிறுவப்படுவது அரசாங்கங்களே. சேர்கின்ற தரப்பினர்களுக்கிடையில்  இணக்கப்பாட்டுடன் அரசாங்கத்தைப் பேணிவருகின்ற ஒரு வருடம் அல்லது ஆறு மாத காலத்திற்காக உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்படும். அவ்விதமாக கூட்டுச்சேர்கின்ற தரப்பினர்களால் அந்த உடன்பாட்டினை எந்தவொரு நேரத்திலும் சிதைக்க முடியும்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் சனாதிபதியிடமே இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கலைப்பதற்கான அதிகாரம் சனாதிபதியிடமே இருக்கின்றது. சர்வகட்சி அரசாங்கம், இடைக்கால ஆட்சி அரசாங்கம் என அழைக்கப்படுகின்ற எல்லாமே சனாதிபதியிடமே தங்கியிருக்கின்றது. அவரை நம்ப முடியுமா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று இடைக்கால ஆட்சி அரசாங்மொன்று பற்றி கோட்டாபய ராஜபக்ஷவுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடாத்தியது.  அடுத்த தினத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ராகவனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  அவ்விதமாக நம்பிக்கை வைக்க முடியாத வெறிபிடித்த உளத்திரிபு நிலையடைந்த  சனாதிபதியொருவரே இங்கு இருக்கிறார்.  அதனால் இந்த சனாதிபதியை இந்த கதிரையில் வைத்துக்கொண்டு முன்மொழியப்படுகின்ற இடைக்கால ஆட்சிக்கு நாங்கள் ஒருபோதுமே இணங்க மாட்டோம். சனாதிபதி நீக்கப்படுவதே மக்களின் பிரதானமான கோரிக்கையாக மாறியுள்ளது. ஆனால் நாடு எவ்வளவுதான் உறுதியற்ற நிலைக்கு இலக்காகினாலும், மக்கள் மத்தியில் எவ்வளவுதான் குழப்பநிலை ஏற்பட்டாலும், ஒட்டுமொத்த அரசபொறியமைப்பு சீரழிந்தாலும் தனது கைகளில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வது பற்றியே கோட்டாபய ராஜபக்ஷ சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.  முழு நாடும் மக்களும் இந்த அரசாங்கத்தால் எவ்வளவுதான் ஆபத்தில் வீழ்த்தப்பட்டாலும்  தமது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ளவே அவர்கள் செயலாற்றி வருகிறார்கள்.

தொடர்ந்தும் முன்னெடுத்து வரப்படுகின்ற இந்த அண்ணன் – தம்பி – மகன்மார்களின் ஆட்சி இந்நாட்டு மக்களால் முடிவுறுத்தப்படல் வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை ஈடேற்றிக்கொள்ளவும் நாட்டைக் கட்டியெழுப்பவும்  இந்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள் என்பது தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது. இதனால் இந்த சனாதிபதியும் அரசாங்கமும் நீங்கிச்செல்ல வேண்டும். அதன்பின்னர் மிகவும் குறுகிய காலத்திற்காக பாராளுமன்றத்தில் ஏதேனும் இடைக்கால ஆட்சியை கட்டியெழுப்பி வெகுவிரைவில் பொதுத்தேர்தலுக்குச் செல்லவேண்டும்.  புதிய மக்கள் ஆணைக்கட்டளை மூலமாக புதிய ஆட்சியைக் கட்டியெழுப்பிட வாய்ப்பினை அளிப்பதன் மூலமாக மாத்திரமே நிரந்த தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆட்சியாளர்கள் நீங்கிச்செல்லாவிட்டால் மக்களின் மக்கள் பலத்தைப் பிரயோகிக்கவேண்டும். அரசியலமைப்பின் உறுப்புரைகளுக்குள்ளே சனாதிபதி மாளிகையின் பதுங்கு குழிக்குள்ளே இராணுவத்தை போட்டுக்கொண்டு ஆட்சிசெய்ய சனாதிபதி தயாராவாரெனில் அது எவ்விதத்திலும் ஒரு வெற்றிகரமான ஆட்சியாக அமையமாட்டாது. அதனால் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அரசியலமைப்பின் உறுப்புரைக்குள்ளே இறுகிப்போய் அதிகாரத்தை உறுதிசெய்துகொள்ள மேற்கொள்ளும் முயற்சியை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாட்டின் தலைவரொருவர் பதுங்குகுழிக்குள் இருந்துகொண்டு நாட்டை ஆட்சிசெய்யப் போவாரெனில் அதற்கு இடமளிக்கக்கூடாது. ஏற்கெனவே மொனறாகல, தம்புல்ல பிரதேசங்களில் இருந்து இராணுவ துணைப்பிரிவுகள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டுள்ளன. பல கவச வாகனங்களை நிறுத்திவைத்து பதுங்குகுழிக்குள் இருந்துகொண்டு நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமா? இனிமேலும் குழப்பநிலையை ஏற்படுத்தாமல் இந்த  சனாதிபதி நீங்கிச்செல்லவேண்டும்.

நீங்கிச் செல்லாவிட்டால் மக்கள் மென்மேலும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்யவேண்டும். எமது தொழிற்சங்க இயக்கம் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கூட்டாக பெருமளவிலான செயற்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளது. 28 ஆந் திகதி மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு பூராவிலும் ஒவ்வொரு நகரத்திலும் ஆர்ப்பாட்டத் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்களின் சக்தி, மக்களின் பலம் இதற்காக பயன்படுத்தப்படவேண்டும். அதைப்போலவே புதிய மக்கள் ஆணைக்கட்டளைக்காக மக்களுக்கு வாயப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு 69 இலட்சம் மக்களின் ஆணைக்கட்டளை இருப்பதாக கூறுகிறார்கள். அவை  இறந்தகாலத்திற்குச் சொந்தமானவை. நிகழ்காலத்தில் இருக்கின்ற மக்கள் ஆணைக்கட்டளையை அளந்து பார்க்கவேண்டும்.  கோட்டாபய ராஜபக்ஷவும் ராஜபக்ஷ குடும்பமும் தேர்தலில் போட்டியிடுவார்களெனின் அவர்களுக்கு எவ்வளவு சொச்ச எண்ணிக்கை எஞ்சியிருக்கின்றது என்பதை அளந்துகொள்ள முடியும். மக்கள் ஆணைக்கட்டளையை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் நாங்கள் வருங்காலத்தில் பிரவேசிப்போம்.  அதிகாரம் இருப்பது பதுங்குகுழிக்குள் அல்லவென்பதை இந்த ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். அதிகாரம் இருப்பது இராணுவத்திற்குள்ளே அல்லவென்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். மக்களின் இறைமைத் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சூழமைவினை வகுக்கவேண்டும்.    அதற்காக மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி, தொழிற்சங்க இயக்கம், கமக்காரர் இயக்கம், இளைஞர் இயக்கம் ஆகிய அனைத்துமே ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புக் கூட்டங்களையும் எதிர்காலத்தில் நடாத்தும்.

இந்த அரசாங்கத்தை மக்கள் அழுத்தத்தின் மத்தியில் அடக்கியே ஆகவேண்டும். முழுநாட்டையும் உறுதியற்ற நிலைக்கு உள்ளாக்கி, குழப்பநிலைக்கு உள்ளாக்கி, மக்களுக்கு பாரிய உணவுத் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி  தொடர்ந்தும்  முன்னெடுத்துச்செல்லப்படுகின்ற அண்ணன் – தம்பி கூத்தினை மக்கள் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.  மக்களின் பலத்தினால் இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்கான பல எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் விடுதலை முன்னணி தயார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்…

கேள்வி:- பயில்களை வெளியே போடுவதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். அது சம்பந்தமான நிலைமை என்ன?

பதில்:- பதற்றமடைய வேண்டாம். மிகவும் சீக்கிரமாக குறுகிய காலத்திற்குள் பெருந்தொகையான பயில்களை வெளியே போடுவோம்.  இன்றளவில் ஒருசில பயில்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில், இலஞ்சம் அல்லது ஊழல்கள் புலனாய்வு ஆணைக்குழுவில், சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்தில்,   நீதிமன்றத்தில் மற்றும் வேறுசில இடங்களில் இருக்கின்றன. மேலும் ஒருசில பயில்கள் எங்களிடம் மாத்திரம் இருக்கின்றன. சனாதிபதி தொடக்கம் பிரதேசசபை உறுப்பினர்வரையும் உயர்மட்ட அரச உத்தியோகத்தர் தொடக்கம் ஒருசில அரச உத்தியோகத்தர்கள், ஒரு சில வணிகத் தொழில்முயற்சியாளர்கள் பற்றிய விபரங்களும் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து தெரிவுசெய்து உரியவகையில் வெளிக்கொண்டு வருவேன். பெரும்பாலானவர்கள் பயில்களை கேட்கிறார்கள். ஏன் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். முன்னர் ராஜபக்ஷ குடும்பத்தை கரங்கூப்பி மலர்வைத்து பூசைசெய்யவேண்டிய குடும்பமென்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த அனைவருமே இந்த குடும்பம் ஒரு திருட்டுக் கும்பலென தற்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். அந்த தகவல்களை நாங்கள் உங்கள் முன்னிலையில் சமர்ப்பிப்போம். குற்றமற்றவரென விடுதலை செய்தல், இலஞ்ச ஆணைக்குழுவினால் வாபஸ் பெறப்படல், சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்தினால் குற்றச்சாட்டுகள் மாற்றியமைக்கப்படல் போன்ற பல இருக்கின்றன.

கேள்வி:- எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சிகள் முனைந்து இடைக்கால ஆட்சியை நிறுவுதல் பற்றி நிலவுகின்ற உரையாடல் தொடர்பிலான மக்கள் விடுதலை முன்னணியின் அபிப்பிராயம் என்ன?

பதில்:- முதலில் சனாதிபதியையும் அரசாங்கத்தையும் அகற்றிய பின்னரே எத்தகைய ஆட்சியையும் பற்றிச் சிந்திக்கவேண்டும். இந்த சனாதிபதியையும் இந்த அரசாங்கத்தையும் வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடாத்துவதில் பயனில்லை. அவர்கள் விலகிய பின்னர் இடைக்கால ஆட்சியின் கட்டமைப்பு என்ன, எந்த திசையை நோக்கிப் பயணிக்கப் போகிறோம் என்பவை பற்றி பேச்சுவார்த்தை நடாத்தலாம்.  இன்றளவில் இந்த பாராளுமன்றத்தில் எந்தவொரு தரப்பிற்கும் பெரும்பான்மை கிடையாது. இந்த பாராளுமன்றத்தில் ஐந்து தரப்பினர்கள் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் எஞ்சிய பகுதி, அரசாங்கத்திலிருந்து நீங்கி சுயாதீனமாக இருக்கின்ற பகுதி, சஜித் பிரேமதாசவின் தலைமையிலான குழு, எமது குழு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை முதன்மையாகக்கொண்ட குழு  என்பவையே அவை.  இந்த ஐந்து குழுக்களினதும் பொது இணைக்கப்பாட்டின்பேரில் அரசாங்கமொன்றை அமைப்பதாயின், நாங்கள் மூன்று பேர் இருக்கின்ற அதேவேளையில், ஏனைய 222 பேர் இருக்கிறார்கள். அமையப்போகின்ற எந்தவோர் அரசாங்கத்திலும் நாங்கள் சிறிய குழுவினரே. அமைக்கப்படுகின்ற எந்தவோர் அரசாங்கமும் எமக்குப் புறம்பான அதிகாரக் குழுக்களின் தேவைகளுக்காக அமைக்கப்படுகின்ற அரசாங்கமாகும்.  அவ்வாறான ஓர் அரசாங்கத்திற்குள் நாங்கள்  உள்ளடங்கப் போகிறோமா இல்லையா என்பதை தனிவேறாக தீர்மானிக்கவேண்டும். சனாதிபதியும் இந்த அரசாங்கமும் விலகிச்சென்றால் மாத்திரமே அவையனைத்தையும் பற்றி பேச்சுவார்த்தை நடாத்த முடியும். அவையொன்றுமே நடைபெறாதநிலையில் மேற்கொள்ளப்படுகின்ற பேச்சுவார்த்தைகள் நேரத்தை வீணடிப்பதற்கான தந்திரோபாயம் மாத்திரமே. அத்தகைய பேச்சுவார்த்தைகளுடன் நாங்கள் தொடர்புபடமாட்டோம்.

கேள்வி:- நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலைமையின் மத்தியில் தேர்தலொன்றுக்குச்செல்ல பணம் இருக்கின்றதா? 

பதில்:- தேர்தலொன்றை நடாத்துவதற்காக 13 பில்லியன் ரூபாவே செலவாகின்றது. கடந்த சனவரி 05 ஆந் திகதி பசில் ராஜபக்ஷ அறிமுகஞ்செய்த பெக்கேஜிற்கு 239 பில்லியன் ரூபா செலவாகின்றது. பதவிநிலைத் தரத்தைச்சேர்ந்த உத்தியோகத்தர்கள் சம்பளமின்றி வேலைசெய்ய தயாரெனக் கூறியிருந்தார்கள். குறைந்தபட்சம் இந்த நிலைமை ஆறுவாரங்களுக்குள்ளேனும் தீர்த்துவைக்கப்பட வேண்டும்.  ஏப்பிறல் மாதத்தின் தொடக்கத்தில் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றதும் தீர்வு கிடைக்குமென மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள்ளே தீர்க்கப்படவில்லை. அடுத்த  பாராளுமன்ற அமர்வு வாரத்தில் தீர்வு கிடைக்குமென  பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதும் இல்லை. அடுத்த அமர்வு வாரம் மே மாதம் நான்காம் திகதியே ஆரம்பிகின்றது. இத்தருணமாகும்போதும் ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலம் கழிந்துவிடும். அப்போதும் தீர்வு இல்லை.  நிலவுகின்ற உறுதியற்றநிலையை நிரந்த உறுதிநிலைக்கு கொண்டுவரவேண்டுமானால் மக்களின் விருப்பத்துடன் புதிய ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டும். அவ்விதமாக கட்டியெழுப்பப்படுகின்ற ஆட்சிக்கு கட்டாயமாக  ஏறக்குறைய ஒன்றரை வருடகாலத்தை பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக மக்கள் வாய்ப்பு வழங்குவார்கள். இந்தப் பாராளுமன்றத்தில் எந்த அரசாங்கத்தை அமைத்தாலும் அடுத்த தினத்தில் தீர்வு கிடைக்குமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக புதிய ஆட்சிக்கு மக்கள் ஆணைக்கட்டளையை வழங்குவார்களாயின் அதற்காக ஏறக்குறைய ஒன்றரை வருட இடைவேளைக் காலம் கிடைக்கும். அதோ அந்த இடைவேளைக் காலப்பகுதிக்குள்தான் இந்த பொருளாதார நெருக்கடியை தீர்த்துவைப்பதற்கான  திசையைநோக்கிச் செல்லமுடியும். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களின் விருப்பத்துடன் புதிய ஆட்சியொன்றுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தால் மாத்திரமே  அரசியல் உறுதியற்ற நிலைமையை நிரந்தமாக முடிவுக்கு கொண்டுவந்து அரசியல் உறுதிநிலையை  ஏற்படுத்த முடியும்.  இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றவர்களை அகற்றி வேறு ஆட்களை நியமிக்கின்ற ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? முன்னாள் அமைச்சரவையை நீக்கி புதிதாக நியமித்த அமைச்சரவையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பிரதமரை அகற்றி வேறோரு பிரதமரை நியமித்தால் ஏற்றுக்கொள்வார்களா?  இனிமேலும் இந்த பாராளுமன்றத்திற்குள் தீர்வுகளைத் தேடுவது நேரத்தை வீணடிப்பதாக மாத்திரமே அமையும். பாராளுமன்றத் தேர்தல் மூலமாக கிடைக்கின்ற மக்கள் ஆணைக்கட்டளைக்குள்ளேயே கோட்டாபய ராஜபக்ஷவின் சிறகுகள் வெட்டப்பட்டுவிடும். அந்த மக்கள் பலத்தைக்கொண்டுதான் கோட்டாபய ராஜபக்ஷவின் சிறகுகள் வெட்டப்பட முடியும். அதற்காக சிலகாலம் கழியுமாயின் அந்த காலத்திற்கு திட்டவட்டமாக பொருந்தக்கூடிய ஏதேனும் மாதிரியை நாங்கள்  முன்மொழிவோம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading