ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பு
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் போதைப் பொருள் பாவனை என்பது பெரும் சிக்கலாக மாறி வருகிறது. இவ்வாறு பயன்படுத்தப்படும் சட்ட விரோத போதைப் பொருள், பயன்படுத்தும் நபரின் உடல், உள மற்றும் உணர்வு ரீதியான சுகாதாரத்தை பாதிப்பது மட்டுமன்றி, குடும்பங்களை சிதைவடையச் செய்வது மற்றும் சமூகங்களை பலமிழக்கச் செய்து, முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டையாகவும் அமைந்துள்ளது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF), “நாளைக்கான தேசத்திற்கு வலுவூட்டல்” எனும் தனது ஒட்டுமொத்தத் தொலைநோக்கிற்கு அமைவாக, சமூக ஆரோக்கியமும் இணக்கப்பாடும் என்ற தனது பிரதான தொனிப்பொருளின் கீழ், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. ஜூன் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் தடுப்புத் திட்டங்களின் ஊடாக மிகவும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க ஓர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
ஜுன் 22 முதல் 24 வரை, JKF இன் ஏற்பாட்டில், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) பங்களிப்புடன் Cinnamon Grand ஹோட்டலின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த 644 ஊழியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளன. இது Cinnamon Hotels & Resorts வலையமைப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் பரந்தளவிலான திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் முதற்கட்டத் திட்டங்கள் கடந்த மே மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கண்டி Cinnamon Citadel மற்றும் Cinnamon Myst ஆகியவற்றில் நடாத்தப்பட்டு, அனைத்து மட்டங்களையும் சேர்ந்த 218 ஊழியர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்களிலும் இத்தகைய அமர்வுகளை வரும் மாதங்களில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
Cinnamon Colombo Hotels இன் பயிலல் மற்றும் விருத்திப் பணிப்பாளர் எஸ்.ஏ.பிரேமசந்திர கருத்துத் தெரிவிக்கையில், “Cinnamon Grand ஹோட்டலின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த சக ஊழியர்களினாலும் இந்த அமர்வுகள் பெரிதும் வரவேற்கப்பட்டதுடன், மிகவும் வெற்றிகரமாகவும் அமைந்திருந்தன. எமது வேண்டுகோளுக்கிணங்க, போதைப்பொருட்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்து பாதுகாப்புப் பிரிவினருக்கான ஒரு விசேட திட்டமும் நடாத்தப்பட்டது. எமது நிரந்தர ஊழியர்களில் 80 சதவீதமானோரும், 34 வெளிவாரியான (Outsourced) ஊழியர்களும் இதில் பங்கெடுத்திருந்தமை எமக்குக் கிடைத்த பாரியதொரு வரவேற்பாகும். எமது குழுவின் ஏனைய உறுப்பினர்களையும் சென்றடையும் வகையில், இவ்வாறான மேலதிக அமர்வுகளை வரும் நாட்களில் நடாத்துவதற்கு நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சுப்பர்மார்க்கெட் வலையமைப்பான Keells, இந்த முயற்சியை தனது கிளைகளின் ஊழியர்களுக்கும் விரிவுபடுத்துவதற்காக அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையுடன் (NDDCB) கைகோர்த்திருந்தது. இதற்கமைய, 145 கிளைகளில் இந்த விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், இதன் மூலம் முன்கள (Frontline) ஊழியர்கள் அபாயங்களை அடையாளம் காணவும், ஆரோக்கியமான தெரிவுகளை ஊக்குவிக்கவும் வழியமைக்கப்பட்டுள்ளது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் வணிகங்களுக்கு அப்பால், போதைப்பொருள் பாவனைக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கும் அதனைத் தடுப்பதற்கும் தேவையான அறிவையும் திறன்களையும் சமூகங்களுக்கு வழங்குவதன் முக்கியத்துவத்தை JKF நீண்டகாலமாக உணர்த்தியுள்ளது. இதற்கமைய, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) மற்றும் Humedica Lanka ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், முன்பள்ளி ஆசிரியர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் சமூகப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் காத்திரமான அமர்வுகளை JKF நடாத்தியுள்ளது. ஆரம்பக்கட்டத் தலையீடுகள், ஆதரவளிக்கும் சமூகச் சூழல் அமைப்பு மற்றும் கூட்டுச் சமூக ஈடுபாடு ஆகியவற்றின் அவசியத்தை இந்த அமர்வுகள் வலியுறுத்துகின்றன.
JKF, பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட தனது பிரதான செயற்திட்டமான Project WAVE (Working Against Violence through Education) இன் கீழ், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்படும் 3 நாட்கள் கொண்ட பயிற்சியாளர்களுக்கான பயிற்சி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதற்கமைய, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் சமூகங்களைப் பாதுகாப்பதில் சட்ட அமுலாக்கத் துறையினரின் முக்கிய பங்களிப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கிய புதிய பாடநெறிப் பிரிவுகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன
இதுவரை, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டு முயற்சிகள் மூலமாக 36,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தனிநபர்கள் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் அபாயங்கள் குறித்த நடைமுறை விழிப்புணர்வைக் பெற்றுக்கொண்டு வலுவூட்டப்பட்டுள்ளனர். இது, எமது மக்களினதும் சமூகத்தினதும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் வளர்த்தெடுப்பதில் இக்குழுமத்திற்கு உள்ள அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்துகின்றது.

You must be logged in to post a comment.