தாக்கி அழிக்கப்பட்ட ஈரானின் கப்பல்கள்! அமெரிக்க இராணுவம் வெளியிட்ட காணொளிகள்
ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை தங்களது படைகள் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல்படை(IRGC) இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்த முயன்றதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இரு தாக்குதல் முயற்சிகளிலிருந்தும் அமெரிக்கப் போர்க்கப்பல் தப்பித்து, பிராந்திய கடற்பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சென்ட்காம் (CENTCOM) தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பதிலடியாக, ஓமன் வளைகுடாவில் ‘எம்/டி காவிஸ்’ (M/T Kaviz), ‘எம்/டி சர்மினார்’ (M/T Charminar), ‘எம்/டி ஹரைசன் 1’ (M/T Horizon 1) மற்றும் ‘எம்/டி ரீஸ்கோ’ (M/T Riesco) ஆகிய எண்ணெய் கப்பல்களையும், கார்க் தீவுக்கு அருகே ‘எம்/டி தர்யா’ (M/T Derya) ஆகிய கப்பலையும் அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, IRGC மற்றும் அதன் பிராந்தியப் படைகளுக்கு நிதி வழங்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள நிழல் வலையமைப்பின் ஒரு பகுதியாகவே இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சென்ட்காம், இந்தக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கு ஈரானிடம் எந்த வழியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 5 அன்றும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் மீது தாக்குதல் நடத்த IRGC முயன்றது. அந்தத் தாக்குதல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை சென்ட்காம் தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.