திலீபனின் உருவச் சிலை பொலிசாரால் அகற்றல்..!!
யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்காகவே திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது🚨
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த உயிர்நீத்த திலீபனின் உருவச்சிலை இன்று (27) காலை காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 6.30 மணியளவில் சுமார் 10 காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று உருவச்சிலையை அகற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நேற்று (26) திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில், மறுநாள் காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 15க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாகனங்களில் வந்து உருவச்சிலையை பலவந்தமாக அகற்றியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே உருவச்சிலை அகற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் ‘எல்லான் படை’ என்ற குழு செயற்படுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும் யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் உருவச்சிலை அகற்றப்பட்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளதாகவும், வழக்கின் அடுத்த விசாரணை ஒக்டோபர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாண மாநகர சபையினால் நேற்று வரை அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You must be logged in to post a comment.