தொடர் போராட்டம் – நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா !!
நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் நேற்று தலைநகர் காத்மாண்டுவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள பிரதமர் ஷர்மா ஒலி, பிரச்சினைக்குத் தீர்வு காணவும், அரசியல் ரீதியாக தீர்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கு உதவவும் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார்.
போராட்டங்கள் ஏற்படுத்திய விளைவு: கடந்த ஆண்டு செப்டம்பரில் நேபாள உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, சமூகவலைதள நிறுவனங்கள் பதிவு செய்யவும், குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவும் ஏழு நாட்கள் அவகாசம் வழங்க நேபாள அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்தது. இந்த நிலையில், பதிவு செய்துகொள்ளாத பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட26 சமூக வலைதளங்களை கடந்த வெள்ளிக்கிழமை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆன்லைன் மோசடி மற்றும் பண மோசடி ஆகியவற்றை சுட்டிக்காட்டி இதேபோன்று, கடந்த ஜூலையில் டெலிகிராம் மெசேஜ் செயலியை நேபாள அரசு தடை செய்தது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் இளைஞர்கள் அதிக அளவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு வாபஸ் பெற்றது. எனினும், ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இதன் காரணமாக, நேபாள காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொள்ள பரீசீலித்த நிலையில் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

You must be logged in to post a comment.