Lead NewsLocal

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து! – மைத்திரியின் உத்தரவுக்கு ஆப்புவைத்தது தேசிய பொலிஸ் ஆணைக்குழு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்துச் செய்திருக்கின்றது என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பணியக அறிக்கைகளை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த, ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிஷாந்த சில்வா, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸ்மா அதிபரே இந்த இடமாற்றத்தை அறிவித்திருந்தார்.

இது, அரசியல் மற்றும், மனித உரிமை அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர் படுகொலைகள் மற்றும் கீத் நொயார், உபாலி தென்னக்கோன், நாமல் பெரேரா உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கொழும்பில் 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான அவன்ட்கார்ட் வழக்கு, ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ள வசீம் தாஜுதீன் கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் விசாரணை அதிகாரியாக செயற்பட்ட நிஷாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னால் பாரிய அரசியல் சதி இருப்பதாகக் கருதப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை குறித்தும் இவரே புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

இவரது இடமாற்றம், முன்னைய ஆட்சிக்கால குற்றங்கள் குறித்த விசாரணைகளை நிறுத்தும் நோக்கம் கொண்டது என்று நம்பப்படுகின்றது.

இந்த இடமாற்றம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் சங்கம், விசாரணைகளை நிறுத்தும் நோக்கிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று கவலை வெளியிட்டுள்ளதுடன், இதற்கும் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிஷாந்த சில்வாவிடம் கையளிக்கப்பட்ட விசாரணைகளை நிறுத்தும் நோக்கிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்குப் பின்னால் பாரிய அரசியல் நோக்கம் இருப்பதாகவும் ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பின் அமைப்பாளர் ஜே.சி.வெலியமுன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது, மற்றும் காணாமல் ஆக்கப்பட்டது உள்ளிட்ட மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரித்த நிஷாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டமை, இந்த விசாரணைகளில் அரசின் தலையீட்டை காட்டுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கு விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading