“பழிக்கு பழி..” பெண்களை நிர்வாணப்படுத்தி சிரியாவில் நடக்கும் கொடூரம்
சில காலமாக சிரியாவில் அமைதி மெல்லத் திரும்பிக் கொண்டிருந்த சூழலில், இப்போது அங்கே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஆளும் தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்த மோதலில் கடந்த இரண்டு நாட்களில் 1000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள சிரியாவில் கடந்த 14 ஆண்டுகளாகவே அங்கு உள்நாட்டுப் போர் தொடர்கிறது. அங்கு பஷர் அல் அசாத் என்பவரே கடந்த 2000ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு எதிராகப் பல முறை கிளர்ச்சி வெடித்தது. இருப்பினும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் அவர் அதை முறியடித்தே வந்தார். இடையில் 2020ம் ஆண்டு அங்கு முக்கிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு அங்குச் சற்று அமைதி திரும்பியிருந்தது.
சிரியாவில் தற்போதுள்ள பாதுகாப்புப் படையினருக்கும் ஜனாதிபதி பஷார் அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் வெடித்துள்ளது. தொடர்ச்சியாக நடக்கும் இந்த சண்டைகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிரியாவில் கடந்த 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்த போதிலும், இந்தளவுக்கு வன்முறை எப்போதும் நிகழ்ந்ததே இல்லை என குறிப்பிடுகிறார்கள்.
சிரியாவில் அசாத் ஆட்சியில் இருந்த போது எண்ணற்ற கொடுமைகள் அரங்கேறின. அப்போதும் கூட அசாத்துக்கு ஆதரவாகவே அலவைட் சிறுபான்மை பிரிவினர் இருந்துள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்கும் நோக்கில் தற்போதுள்ள ஆட்சிக்கு ஆதரவான சிலர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் உயிரிழந்தனர். அதன் பிறகு அசாத் ஆதரவாளர்களும் பதிலடி தாக்குதலை ஆரம்பித்ததே இந்த வன்முறைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு விரைவாக எடுத்த நடவடிக்கைகளால் மோதல் சற்று முடிவுக்கு வந்துள்ளது.

You must be logged in to post a comment.