பாகிஸ்தான் நோக்கிச் சென்ற கப்பலைத் திருப்பி அனுப்பியது ஈரான்
ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது.
குறித்த கப்பல் முறையான அனுமதி இன்றி ஈரானிய கடல் எல்லைக்குள் நுழைய முயன்றதாகக் கூறி, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
‘செலன்’ (Selan) என அழைக்கப்படும் இந்தக் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.
கப்பல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டாங்சிரி, ஈரானின் சட்டங்களுக்கு இணங்காதது மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்க அனுமதி இல்லாதது காரணமாகவே அந்தப் பெரிய கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“இந்த நீர்வழி ஊடாகப் பயணிக்கும் எந்தவொரு கப்பலும் ஈரானிய கடல்சார் அதிகாரிகளுடன் முழுமையான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
ஈரானிய அதிகாரிகளின் அனுமதி இன்றி எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் பகுதியைத் கடக்க முடியாது. ‘பகைமையற்ற’ கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி (சில சந்தர்ப்பங்களில் அதற்காகக் கட்டணம் செலுத்தி) எமது கடல் எல்லையைப் பயன்படுத்த முடியும். ஆனால் எதிரிகளுடன் தொடர்புகளைப் பேணும் கப்பல்கள் எமது கடல் எல்லையைக் கடப்பது தடைசெய்யப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.