Uncategorized

பெப்ரவரியில் சுற்றுலாத்துறை மூலம் 169.9 மில்லியன் டொலர் வருமானம் !

 

பெப்ரவரி மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 169.9 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 169.4 மில்லியன் டொலர் வருமானம் சுற்றுலாத்துறையின் ஊடாக கிடைத்துள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 2 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், இதுவரையில் 331.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் தெற்காசிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இதன்படி, ஜனவரியில் 1 இலட்சத்து 2 ஆயிரத்து 545 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர். பெப்ரவரியில் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 639 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மார்ச் 8ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகை 2 இலட்சத்து 34 ஆயிரத்து 547 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விடவும் 9.6 சதவீத அதிகரிப்பாகும்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜேர்மனி ஆகியவை இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் முதல் மூன்று மூலச் சந்தைகளாக பதிவாகியுள்ளன.

இலங்கையின் முன்னணி அந்நியச் செலாவணியில் ஒன்றான சுற்றுலாத்துறை, கொவிட்-19 தொற்று மற்றும் உள்நாட்டு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

2023இல் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும் 2024இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும் இலக்காகக் கொண்டு இலங்கை செயற்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading