Local

மகிந்த மற்றும் ரணில் மீதான ஊழல் விசாரணைகள் குறித்து UNHRC அறிக்கை

 

இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது வழக்கமான அமர்வில் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழல் விசாரணை ஆணைக்குழு

இதேவேளை, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான பொதுப்பண முறைக்கேடு விசாரணைகள் குறித்தும் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் நாட்டில் நிலவும் நிதி அழுத்தம் மற்றும் அரச வருமான பகிர்வு தொடர்பில் பிரதான விடயங்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன:

2026 ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கமைய நாட்டின் அரச வருமானத்தில் 49.38 சதவீதம் பெறப்பட்ட கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலதிக அழுத்தம்

அரச வருமானத்தில் பெரும்பகுதி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம், கல்வி, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1.9 முதல் 2.4 சதவீதம் என்ற சிறிய தொகையே ஒதுக்க முடிந்துள்ளது.

வரையறுக்கப்பட்ட அரச நிதி வெளிப்பாட்டின் மத்தியில் சக்திவள, உணவு மற்றும் உர விலையேற்றம் காரணமாக மக்கள் மீது மேலதிக அழுத்தம் ஏற்படக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து இலங்கைக்குள் சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் ஊடாக ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்தச் சீர்திருத்தங்களை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading