World

மரணத் தருவாயிலும் மங்காத நம்பிக்கை!

நம்பிக்கை – அதுதான் வாழ்க்கையின் எல்லாமுமாக இருக்கிறது. ஆனால், மரணம் எந்த நேரத்திலும் பற்றிக்கொள்ளும் எனும் நிலையிலும் அதனை நெஞ்சில் தாங்கி இருப்பது மிகப்பெரும் தவம்.

வாழ்வதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கைநழுவிய போதும் அப்படி ஒரு நம்பிக்கையை மனதிலிருத்தி மரணத்தைக் கடந்து வந்திருக்கிறார் வர்கீஸ் சாம் எரலில் என்றொரு இளைஞர்.

மும்பைக்கு அருகே கடலில் நிறுத்தப்பட்டிருந்த பப்பா 305 என்ற படகு, சமீபத்தில் வீசிய டவ்தே (Tauktae) புயலுக்கு இரையானது. அதில் இருந்த 261 பேரில் வர்கீஸ் சாம் எரலிலும் ஒருவர்.

உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அத்தனையும் பொய்த்துப் போன போதும், அப்படகில் பயணித்தவர்கள் எவ்வாறு நம்பிக்கையின் முனையை இறுகப்பற்றி இருந்தனர் என்பதற்கு சாமின் வார்த்தைகளே சாட்சி.

“மே 16, 2021. இரவு உணவை முடித்துக்கொண்டு நாங்கள் அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றோம். கப்பலின் மேல்தளத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தபோதும், காற்று அதிகமாக இருந்த காரணத்தால் எவரும் செல்லவில்லை.

ஓ.என்.ஜி.சி.க்காக (Oil and Natural Gas Corp.) பணியில் ஈடுபட்டிருந்த எங்களது கப்பல் அளவில் சிறியது, பெரிய படகு போன்றது; 8  நங்கூரங்களைக் கொண்டிருந்தது.

புயல் எச்சரிக்கை காரணமாக மற்ற படகுகள், கப்பல்கள் மும்பை கடற்பகுதிக்கு திரும்பிச் சென்றாலும், நாங்கள் மட்டும் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

நேரம் செல்லச்செல்ல படகின் அசைவு அதிகமானது. இதனால் நங்கூரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

14 நங்கூரங்களை இட்ட போதும் படகு அங்கும் இங்கும் ஆடியது.

காற்றின் வேகமும் சத்தமும், அது புயல் என்பதை உணர்த்தியது. ஆனாலும், நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் நாங்கள் அனைவரும் தூங்கச் சென்றோம்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து, உயிர்காக்கும் சாதனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவிப்பு ஒலித்தது.

அப்போதும் கூட அது ஒரு சாதாரண முன்னெச்சரிக்கை அறிவிப்பு என்றே நினைத்தோம். அதனால் பாஸ்போர்ட், வேலட், மொபைல் ஆகிவற்றை எடுத்துக் கொண்டு காத்திருந்தோம்.

எங்களது படகில் இருந்த நங்கூரங்களில் ஒவ்வொன்றாகப் பிடுங்கி எறியப்பட்டபோது எங்களது பயம் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கேற்றவாறு படகும் தாறுமாறாக ஆடிக்கொண்டிருந்தது.

புயலில் படகு அருகிலிருந்த ரிக் பிளாட்பார்ம் மீது மோதக் கூடாதே என்ற பயமே எங்கள் மத்தியில் அதிகம் இருந்தது. அத்தளத்தின் மீது மோதினால், அதில் இருக்கும் வாயு மற்றும் எண்ணெய்யால் தீ விபத்து நிகழ வாய்ப்பு அதிகம் என்பதே அதற்குக் காரணம்.

மீதமுள்ள நங்கூரங்களும் பிடியை இழப்பதற்குள் எங்களால் முடிந்த அளவுக்கு கப்பற்படை மற்றும் எங்கள் நிறுவன தலைமையகத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அதற்குள் நாங்கள் பயந்தவாறே ரிக் பிளாட்பார்ம் மீது படகு மோதியது.

அந்த இடத்தில் எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய் எதுவும் இல்லாத காரணத்தால் தீ விபத்து ஏற்படவில்லை.

ஆனால், படகில் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்துவிட்டது.  தண்ணீர் உள்ளே வரத் தொடங்க என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் திகைத்துப் போயிருந்தோம்.
தரைத்தள பகுதியிலிருந்து உதவி கேட்டு கூக்குரல்கள் எழுந்த போதும், ஒட்டுமொத்தத்தில் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை ஒருவராலும் கண்டறிய முடியவில்லை.

அதனால் தண்ணீர் முழுவதுமாக படகில் நிரம்புவதற்குள் ஒவ்வொருவராக தப்பித்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.

அங்கிருந்து 12 அபாய கால மிதவைப் படகுகளில் ஒன்று மட்டுமே சேதம் இல்லாமல் இருந்தது. 10க்கும் மேற்பட்டோர் அதில் ஏறி கடலில் இறங்கியபோது, படகின் கீழ்ப்பகுதியில் மோதியதால் சேதம் ஏற்பட்டது. அதில் இருந்தவர்கள் கடல் அலையில் தூக்கி வீசப்பட்டனர்.

கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால், சில மைல் தொலைவில் இருந்த கப்பற்படை படகை தொடர்பு கொள்ள முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. கப்பற்படையில் இருந்து காத்திருக்குமாறு தகவல் வந்ததால், நாங்கள் அனைவரும் எதுவும் செய்யாமல் இருந்தோம்.
மழை மெதுவாக வலுக்கத் தொடங்க, கப்பல் அருகே வந்தாலும் படகு அதன் மீது மோதி விபத்து நடக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்தோம். அதற்குள் நிலைமை கை மீறிப் போயிருந்தது.

படகுக்குள் அதிகளவில் நீர் வரத் தொடங்க, அதிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் உண்டானது.

உடைமைகளை முதுகில் கட்டிக்கொண்டு நாங்கள் ஒவ்வொருவராக கடலுக்குள் குதிக்கத் தொடங்கினோம்.

அந்த நேரத்தில் பாதி படகு கடலுக்குள் மூழ்கி இருந்தது. நாங்கள் இருந்த இடத்திலிருந்து கடல்மட்டம் 50-60 அடி தொலைவில் இருந்தது. எங்களுடன் இருந்தவர்களில் பலர் தவறான இடத்தில் குதித்து, படகுக்குள் சிக்கிக்கொண்டனர்.

சுமார் 10-20 அடி உயரம் இருக்கும்போது, நான் கடலுக்குள் குதித்தேன். நாங்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டு, கைகோர்த்து நீந்த தொடங்கினோம்.

நாங்கள் அணிந்திருந்த லைப் ஜாக்கெட் ஒளிர்ந்து கொண்டிருந்ததால், அது கப்பற்படை எளிதில் அடையாளம் காண உதவும் என நம்பினோம்.

ஆனால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் கப்பலும் தென்படவில்லை. கண்ணில் உப்பு நீர் பட்டு  கரிக்கத் தொடங்கியது.

ஒரு அலை நீருக்குள் ஆழ்த்தினால், இன்னொரு அலை காற்றில் தூக்கி வீசியது. எத்தனை அனுபவமிக்கவராக இருந்தாலும், இந்தச் சூழலில் வாந்தி உணர்வையும் மயக்கத்தையும் தவிர்க்க முடியாது.

நாங்கள் சுமார் 15 – 16 பேர் இருந்தோம்; சிலருக்கு நீச்சல் தெரியவில்லை. பயம் அதிகமாக, அவர்கள் கைகளை ஆட்ட உடல் சோர்வு அதிகமாகத் தொடங்கியது.

அந்த நேரத்தில் அலைகள் எங்களைப் பிரிக்க, நாங்கள் ஒன்றாகக் கூடியிருக்க முயற்சிகளை மேற்கொண்டோம். மெதுவாக எங்களது வளையம் பெரிதாகத் தொடங்கியது. மேலும் பலர் எங்களோடு சேரத் தொடங்கினர்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து, கப்பற்படை கப்பல் கண்ணில் தென்பட்டது. ஆனால் விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியது.
மழை மீண்டும் வலுக்க, அலைகள் விஸ்வரூபம் எடுக்க, என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மீட்பு என்பது சுலபமாக நிகழாது என்ற சூழலில் நாங்கள் ஒவ்வொருவரும் விதவிதமாக அலறத் தொடங்கினோம்.

கடவுளை அழைப்பதும் கண்ணீரில் கரைவதுமாக, அந்த நிமிடங்கள் கரைந்தன.

கரிப்பு அதிகமாக, கண்களை மூடிக்கொண்டேன். விழித்தபோது இரவு 12 மணி ஆகியிருந்தது. அப்போது, நாங்கள் 6 பேர் மட்டுமே அங்கிருந்தோம்.

கப்பல் தென்பட்டபோது உயிர் பிழைக்கும் அவசரத்தில் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு நீந்தினோம். கப்பலிலிருந்து போடப்பட்ட ஏணியில் ஏற முயற்சித்தபோது, எனக்கு முன்னே  ஏறியவர் கால் நழுவி கீழே இருந்த என்னை மிதித்துத் தள்ளினார்.
கடலுக்குள் விழுந்த நான் தட்டுத்தடுமாறி மேலெழுந்தபோது, மிதவை ஒன்று கைகளில் தட்டுப்பட்டது. அதில் கயிறு கட்டப்படவில்லை என்று தெரிந்ததும் வேகமாக கப்பலை நோக்கி நீந்தினேன். அப்போதும் அந்த மிதவை என் கைகளிலேயே இருந்தது.

சில நொடிகளில் கப்பலை அடைந்து விடுவேன் என்றிருந்த நிலையில், எங்கிருந்தோ வந்த அலை ஒன்று என் மீது மோதியது. அவ்வளவுதான்! சில நிமிடங்களில் கப்பலை விட்டு பல மைல் தூரம் சென்று விட்டேன்.
அலை மேல் உயர்ந்தபோது, கப்பலிலிருந்து உமிழப்பட்ட வெளிச்சம் என் கண்ணில் பட்டது. கப்பல் வெகுதூரத்தில் இருந்தது. அப்போதுதான் என்னை சுற்றி யாரும் இல்லாததை உணர்ந்தேன்.

சுற்றிலும் கும்மிருட்டு. மெதுவாக, என் லைப் ஜாக்கெட்டில் இருந்த வெளிச்சமும் மறைந்து போனது. அப்போது மரணம் என்னை தழுவப் போவதாக நினைத்துக் கொண்டேன்.

புயலின் மையப் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தேன்.  உடனே முழு பலத்தையும் திரட்டி கொண்டு, மீண்டும் உத்வேகமாக நீந்தத் தொடங்கினேன்.

காலையில் குஜராத் கடற்கரையிலோ அல்லது ஓமனிலோ கரையொதுங்கலாம் என்ற எண்ணம் மேலெழுந்தது. அதேநேரத்தில் பசியிலும் பஞ்சத்திலும் நான் மடிந்து போகலாம் என்பதும் மனத்தில் தோன்றியது.

இந்த எண்ணங்களுடன் சற்றே கண்ணயர்ந்தபோது, ஒரு அலை என் முகத்தில் ஓங்கி அறைந்தது. தொடர்ந்து வந்த அலைகள் என் தூக்கத்தை தள்ளிப் போட்டன. விடியற்காலை 5:30 மணி வரை இது தொடர்ந்தது.

வெயில் வந்த பிறகு ஒரு கப்பல் கண்ணில் பட்டது. கையிலிருந்த விசிலை எடுத்து ஊத, அதற்கு பதிலளிக்கும் விதமாக கப்பலிலிருந்து ஹாரன் சத்தம் ஒலித்தது.

அந்தக் கப்பலின் தளத்தில் பலர் நின்றிருந்தனர். அவர்களோடு ஒரு ஏணியும் இருந்தது. அதே நேரத்தில் எனக்கு பின்னால் கப்பற் படையைச் சேர்ந்த கப்பலும் வந்து சேர்ந்தது.

கப்பற்படையின் ஹெலிகாப்டர் தலைக்கு மேலே வந்தபோது, உயிர் பிழைத்து விட்டேன் என்பதை புரிந்து கொண்டேன்.

மீட்புப் படையினர் என்னைக் கப்பலில் ஏற்றியபோதும் என் மனம் மகிழ்ச்சியில் ஆளவில்லை. காரணம், மரணத்தை தாண்டி வந்த சோகத்தை விட நண்பர்கள் பலர் இறந்து போனது என் மனதை உலுக்கி எடுத்தது.

உயிர் பிழைத்த நண்பர்கள் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு தழுவிக் கொண்டனர். ஆனாலும் இன்னும் சில நண்பர்களைப் பற்றிய விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை”.

மேற்கூறப்பட்ட அனைத்தும் ஒரு பத்திரிகைக்காக சாம் எரலில் நேரடியாகக் கூறியது.

சாம் எரலில் போன்று பல்வேறு வெல்டர்கள், பெயிண்டர்கள், என்ஜினியர்களாக ‘பப்பா 305’ படகில் பணியாற்றிய 261 பேரில் 186 பேர் மட்டுமே தற்போது உயிர் பிழைத்துள்ளனர்; 70 பேர் மரணமடைந்தது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 5 பேர் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
இந்த விபத்து குறித்து விரைவில் அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளது மத்திய எண்ணெய் வளத்துறை.

பின்குறிப்பு: ஓஎன்ஜிசி மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களில் ஒருவரான ஆப்கன்ஸ் இன்பராஸ்ட்ராக்ஷர் (Afcons Infrastructure) என்ற நிறுவனம் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளது; இந்நிறுவனம் சபூர்ஜி பலோன்ஜி குரூப்புக்கு (Shapoorji Pallonji Group) சொந்தமானது.

டவ்தே புயல் பற்றி மே 11ஆம் தேதியே இந்திய வானிலைத் துறை எச்சரிக்கை விடுத்தது.
அரபிக்கடலில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்ட பல்வேறு ரிக்குகள், படகுகள், கப்பல்கள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனாலும் படகின் அளவை மனதில் கொண்டு புயலை எதிர்கொள்ளலாம் என்று பி305இல் எடுக்கப்பட்ட முடிவே இந்த மாபெரும் விபத்துக்கு முக்கியக் காரணம்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆற்றிய பணிக்கு ஏற்ப பல லட்சங்கள் இழப்பீட்டுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலரது சராசரி தினசரி வருமானம் 1,000 ரூபாய்க்கும் குறைவு. ஆதலால் இந்தப் படகில் இருந்தவர்கள் புயல் எச்சரிக்கைக்கு பிறகும் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டது வெறுமனே மனிதத் தவறாக எடுத்துக் கொள்ளப்படாமல் மனிதத்திற்கு இழைக்கப்பட்ட தவறாகவே கருதப்படவேண்டும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading