Local

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து நஷ்டஈடு அறவீடு

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா மின்சார சபையின் நஷ்டஈடாகவும், 2,527,500.00 ரூபா நீதிமன்ற அபராதமாகவும் இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார மீட்டர்களில் மாற்றங்களைச் செய்து மின்சாரத்தைப் பெற்ற 1,259 சம்பவங்களும், கொக்கிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 72 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இத்தகைய சம்பவங்களால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் முகாமையாளர் (விசாரணை) இந்திக பெர்னாண்டோ கூறுகையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்ட நபர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவித்தார்.

மோசடியான மின்சாரப் பயன்பாடு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், 011-2422259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading