முன்னாள் அமைச்சர் பௌஸி பகிரங்க மன்னிப்புக் கோரினார்!
அரசு வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஃபௌஸி பகிரங்க மன்னிப்புக் கோரினார்!🚨
முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். ஃபௌஸி, அரச வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்திய விவகாரம் தொடர்பில், இன்று (ஒக்டோபர் 24) சிங்கள மொழி அரச செய்தித்தாளில் பகிரங்க மன்னிப்புக் கோரும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த மன்னிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு சுமார் 66 இலட்சம் ரூபாவைச் செலுத்துவதுடன், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பத்திரிகைகளில் பகிரங்க மன்னிப்புக் கோரவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனத்தைத் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை ஃபௌஸி மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்தது.
அவரது செயலைப் பொதுமக்களின் நம்பிக்கைக்குச் செய்யப்பட்ட “முன்மாதிரியான துரோகம்” என நீதிமன்றம் வர்ணித்திருந்தது.
முன்னாள் இலங்கை வர்த்தக சம்மேளனத் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
மேலும், வாகனத்தின் புகைப்படத்துடன் அரைப் பக்க மன்னிப்புக் கோரும் விளம்பரங்களை அரச பத்திரிகைகளான சிலுமின, சண்டே ஒப்சர்வர் மற்றும் தினகரன் ஆகியவற்றில் வெளியிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

You must be logged in to post a comment.