LocalNorth

யாழில் விசேட அதிரடிப் படை வேட்டை! – ஆவா குழுவுக்கு வாள்கள் விநியோகித்தவர் சிக்கினார்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றுக் காலை விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் இவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்படும் போது அவரிடம் வாள் ஒன்று இருந்தது எனவும் பொலிஸார் கூறினர்.

ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஆவா குழுவினருடன் தொலைபேசி தொடர்புகளை வைத்திருந்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் இவர் ஏற்கனவே குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் தீவிர விசாரணைகளின் பின்னர் சுன்னாகம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைதுசெய்யப்பட்டனர் எனவும், 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் 7 பேர், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 7 பேர், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் என 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டில் 151 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading