Local

ரவி கருணாநாயக்காவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான நியமனம் தற்போது உள்ளக நெருக்கடியாக மாறியுள்ளது.

அவர்களுக்கு கிடைத்துள்ள குறைந்த எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை பிரதிநிதித்துவப்படுத்த ஏராளமானோர் தயாராக இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பட்டியலில் புதிய ஜனநாயக முன்னணி 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

மேலும், புதிய ஜனநாயக முன்னணியினால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ரவி கருணாநாயக்கவின் பெயர் நேற்றிரவு (18) கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளின் அங்கீகாரம் இன்றி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில்,  அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான பிரதிநிதிகளை நியமனம் செய்வதில்,  கேஸ் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி மற்றும்  ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை அக்கட்சியின் பொதுச் செயலாளர்  ஷியாமலா பெரேரா, தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று முன்வைத்ததையடுத்து நெருக்கடி அதிகரித்தது.

ஆனால் தனது அனுமதியின்றி தன்னிச்சையான முறையில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அவரது பெயர் அனுப்பப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனநாயக முன்னணியின் பிரதிநிதிகளுக்கு அறிவித்திருந்தார்.

இதன்படி, ரவி கருணாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தமை தொடர்பான விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் பங்காளி கட்சிகள் இன்று கொழும்பில் கூடவுள்ளனர்.

இந்நிலையில், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக  ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றிரவு வர்த்தமானி ஊடாக அறிவித்தது.

இதேவேளை, இன்று காலை கொழும்பில் உள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

புதிய ஜனநாயக முன்னணியின் மற்றைய தேசியப் பட்டியல் உறுப்பினருக்கு பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட்ட  கஞ்சன விஜேசேகரவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தனது 05 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரையும் யாரையும் நியமிக்கவில்லை.

இவ்வருட பொதுத் தேர்தலில் பல கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டிருந்த நிலையில், அதில் பல கட்சிகள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கோரியுள்ளதன் காரணமாக தற்போது பிரதிநிதிகள் நியமனம் தொடர்பில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading