Jobs

ஹேமாஸ் மருத்துவமனை 3 மில்லியனுக்கும் மேற்பட்ட அக்ரஹாரா பயனாளிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பை பெற்றுக்கொள்ள இயலச் செய்துள்ளது

LMD சஞ்சிகையின் பிரகாரம், இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான ஹேமாஸ் மருத்துவமனை, அரச துறை ஊழியர்களுக்கான அக்ரஹாரா காப்புறுதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு குறைந்த செலவுடன், உயர்தர மற்றும் சௌகரியமான சேவைகளை வழங்கும், இலங்கையிலுள்ள மிக அதிகமாக சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றுள்ள ஒரு மருத்துவமனையாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அக்ரஹாரா, 3 மில்லியனுக்கும் மேற்பட்ட அரச மற்றும் அரசுடன் இணைந்தியங்கும் நிறுவக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முழுமையான மருத்துவக் காப்புறுதியை வழங்குகின்றது. நோயாளரை மையமாகக் கொண்ட சுகாதாரப் பராமரிப்பினை, கணிசமான சேமிப்புக்கள் மற்றும் ஏனைய நன்மைகளுடன், ஹேமாஸ் மருத்துவமனையின் பரந்த அடைவு மட்டம் மற்றும் அதிநவீன ஆற்றல்களின் அனுகூலத்தினை தற்போது இந்த பயனாளிகள் பெற்று அனுபவிக்க முடியும்.
குறைந்த கட்டணங்களுடன், பணத்திற்கு உண்மையான மதிப்பை வழங்கி, சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தனித்துவமான சேவை வழங்குநராக ஹேமாஸ் மருத்துவமனை தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அந்த வகையில், அக்ரஹாரா பயனாளிகளின் பல்வேறுபட்ட தேவைகளுக்கு தீர்வாக, குறைந்த கட்டணங்களுடன், வடிவமைக்கப்பட்ட விசேட மருத்துவத் திட்டங்களை ஹேமாஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. சிசேரியன் மற்றும் சாதாரண மகப்பேறு, முழங்கால் மற்றும் இடுப்பு மாற்றுச் சிகிச்சைகள், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, ஒட்டுமொத்த சிறுநீரக அறுவை சிகிச்சைகள் அடங்கலாக பல்வேறு அத்தியாவசியமான மற்றும் முக்கியமான மருத்துவ சேவைகளை இத்திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன. குறைந்த கட்டணங்களைக் கொண்டுள்ள இத்திட்டங்கள் கட்டுபடியான வழியில் சிகிச்சைகளை அணுகும் வாய்ப்பினை அக்ரஹாரா பயனாளிகளுக்கு வழங்குவதுடன், தேசத்திற்காக உழைப்பதில் தமது வாழ்வுகளை அர்ப்பணித்தவர்களுக்கு சௌகரியமான வழியில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதில் ஹேமாஸ் மருத்துவமனையின் உறுதிப்பாட்டையும் மீள உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்விசேட திட்டங்களுக்குப் புறம்பாக, வெளிநோயாளர் சிகிச்சைகளின் போதும் கணிசமான தள்ளுபடிகளை அக்ரஹாரா பயனாளிகளுக்கு ஹேமாஸ் மருத்துவமனை வழங்குகின்றது. ஆய்வுகூட சோதனைகள் மற்றும் கதிரியக்கவியல் சோதனைகளுக்கு விசேட தள்ளுபடிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. தங்கும் அறைகளுக்கான கட்டணங்கள் மற்றும் வெளிநோயாளர் மருத்துவ சேவைகளுக்கான விசேட கட்டணங்கள் பயனாளிகளின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. பயனாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் கணிசமான நிதி நிவாரணம் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான அணுகலை வழங்கும் வகையில் இந்த விரிவான தள்ளுபடித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து செலவுகளுக்கான சிரமங்களின்றி, வீடுகளிலிருந்து கொண்டே சௌகரியமான வழியில் மாதிரிகளை சேகரிப்பதற்கான வாய்ப்பாக, ஹேமாஸ் நடமாடும் ஆய்வுகூட வசதியின் ஒப்பற்ற சௌகரியத்தையும் நோயாளர்கள் அனுபவிக்க முடியும். நடமாடுவதில் சவால்களைக் கொண்டுள்ளவர்களுக்கு குறிப்பாக இச்சேவை மிகவும் பெறுமதியானது.
அக்ரஹாரா பயனாளிகள் பெற்றுக்கொள்ளும் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், சௌகரியம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு ஆகியவற்றை வழங்கும் வகையில் பல்வகைப்பட்ட கூடுதல் சேவைகளையும் ஹேமாஸ் மருத்துவமனை வழங்குகின்றது. அனுமதிக்கட்டணத்தில் தள்ளுபடி, பிரத்தியேக கருமபீடங்கள் மற்றும் சேவை அணிகள் ஆகியவையும் அடங்கியுள்ளதுடன், அக்ரஹாரா பயனாளிகளுக்கு தங்குதடையின்றிய, நோயாளரை மையமாகக் கொண்ட அனுபவத்துடன் குடும்ப ஆதரவையும் கொண்டிருப்பதற்கு அனுசரணையளிக்கின்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக, அரச ஸ்தாபனங்கள் மத்தியில் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வைக் கட்டியெழுப்பும் நோக்குடன் பல்வகைப்பட்ட மருத்துவ சோதனை நிகழ்ச்சித்திட்டங்களையும் ஹேமாஸ் மருத்துவமனை முன்னெடுத்து வருகின்றது. சுகாதாரம் மற்றும் உடல்நலம் மீதான செயலூக்கமான அணுகுமுறையை ஊக்குவிப்பதனூடாக, அரச துறை ஊழியர்கள் உடல்நலனுக்கு முன்னுரிமையளித்து, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைக் கைக்கொள்ள இம்முன்னெடுப்புக்கள் அவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன.
ஹேமாஸ் மருத்துவமனையின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி லகித் பீரிஸ் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துடன் ஒத்துழைத்துச் செயல்படுவது, 3 மில்லியனுக்கும் மேற்பட்ட அக்ரஹாரா பயனாளிகளின் சுகாதாரப் பராமரிப்பு அனுபவத்தை மேம்படுத்தும் எமது இலக்கில் மிகவும் முக்கியமானதொரு படியாகும். அரச துறை ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் வாழ்வுகளுக்கு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கட்டுபடியான, அணுகக்கூடிய, நோயாளரை மையமாகக் கொண்ட, கருணையும் அக்கறையும் மிக்க சேவைகளை வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். தேசத்திற்கு அவர்கள் ஆற்றுகின்ற சேவைகளை கௌரவிக்கும் வகையில், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு பிரத்தியேகமான நன்மைகளை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
ஹேமாஸ் மருத்துவமனை மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒத்துழைப்பின் அனுகூலத்துடன் மேற்குறிப்பிட்ட சேவைகளும், நன்மைகளும் வழங்கப்படுகின்றன. அக்ரஹாரா பயனாளிகள் உயர்தர மருத்துவ சேவைகளைப் பெற்று, அதன் பலனாக அரச துறையினுள் சுகாதாரப் பராமரிப்பு தராதரங்களை ஒட்டுமொத்த அளவில் மேம்படுத்துவதற்கு பங்களிப்பதை உறுதி செய்வதே இக்கூட்டாண்மையின் நோக்கமாகும்.
Australian Council on Healthcare Standards International (ACHSI) தரச்சான்று அங்கீகாரத்துடன், Integrated Management System (IMS) தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையிலுள்ள ஒரேயொரு வைத்தியசாலை என்ற தனிச்சிறப்பைக் கொண்டுள்ள ஹேமாஸ் மருத்துவமனை, சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மகத்துவத்திற்கான உலகளாவிய தரஒப்பீட்டு நியமமாகத் திகழ்ந்து வருகின்றது. மிகவும் மதிப்புமிக்க மேற்குறிப்பிட்ட தரச்சான்று அங்கீகாரங்கள், அக்ரஹாரா பயனாளிகள் அடங்கலாக அனைத்து நோயாளர்களும் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு சேவைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்து, நோயாளர் பராமரிப்பிலும், செயல்பாட்டு திறனிலும் அதியுயர் தரங்களைப் பேணுவதில் வைத்தியசாலையின் அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றன. அந்த வகையில், இக்கூட்டாண்மையானது அரச துறை ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலனை மேம்படுத்துவது மட்டுமன்றி, இலங்கையில் நோயாளரை மையப்படுத்திய பராமரிப்பில் முன்னோடி என்ற ஹேமாஸ் மருத்துவமனையின் ஸ்தானத்தையும் மீள உறுதிப்படுத்துகின்றது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading