Local

வரி, சம்பளம் உயரும் ‘பட்ஜட்’- சபையில் நாளை சமர்ப்பிப்பு! ஏப்ரல் 5 இல் இறுதி வாக்கெடுப்பு

2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத் திட்டம் நாளை (5)  திகதி பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்படும் பாதீட்டில், வழமைபோல் இம்முறையும் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை நிதி அமைச்சரின் ‘பட்ஜட்’ உரை மாத்திரமே இடம்பெறும்.

6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் (Second Reading Debate)  நடைபெறும். 12 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்துக்கு (Committee Stage Debate ) 19 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெற்று, 5 ஆம் திகதி பட்ஜட்மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதேவேளை, பாதீடு முன்வைக்கப்படும் தினத்தில் பார்வையாளர் கலரி மூடப்பட்டிருக்கும். முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஆராய்வதற்காக அன்று மாலை அரசியல் கட்சிகளின் கூட்டங்களும் நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் நடைபெறவுள்ளன.

……

                                                                மொத்த வருமானம் – செலவு

2019 இல்  பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 400 பில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளது..

இந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு, 393 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. கடந்த ஒக்ரோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கு, 307 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காவல்துறை திணைக்களம் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு 383 பில்லியனாக அதிகரித்துள்ளது,

தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ்,   இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், காவல்துறை ஆகியன இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டின் மொத்த அரசாங்க செலவினமாக 4,470 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த தேசிய உற்பத்தியில் 4.8 வீதம், பாதீட்டு பற்றாக்குறையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2019 வரவுசெலவுத் திட்டத்தில், 2,200 பில்லியன் ரூபா கடன் சேவைகளுக்காக ஒதுக்கப்படும்.

வழமையாக நவம்பர் மாதம் பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டு அது டிசம்பரில் நிறைவேற்றப்படும். எனினும், அரசியல் குழப்பம் காரணமாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதனால் பட்ஜட் சமர்ப்பிக்கப்படவில்லை.

மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவான பின்னர் மூன்று மாதங்களுக்கு தேவையான இடைக்கால கணக்கறிக்கையே முன்வைக்கப்பட்டது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading