உடைக்கப்பட்ட சிவராத்திரி வளைவைப் பொருத்துங்கள்! – மன்னார் நீதிவான் அதிரடி உத்தரவு
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மதவெறி பிடித்த நபர்களினால் உடைக்கப்பட்ட மகா சிவராத்திரி வளைவை மீண்டும் அமைக்கும்படி மன்னார் நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அந்த வளைவை அங்கு பொருத்தி வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் செல்லும் வழியிலிருந்த சிவராத்திரி வளைவு பல வருடங்கள் பழைமையானது. அதை நேற்று ஆலய நிர்வாகம் புதுப்பித்தது. இந்தநிலையில், விஷமிகள் குழுவொன்று அடாவடியாக அதை அடித்துடைத்து அகற்றியிருந்தது. அதில் வங்காலை பங்குத்தந்தை மார்க்ஸ் உள்ளிட்ட பாதிரிகளும் நின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், அவசரம் கருதி இன்று காலை மன்னார் நீதிவானின் இல்லத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தீர்ப்பளிக்கப்பட்டது என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
