Jobs

2025ம் ஆண்டுக்கான “SLIIT நட்சத்திரங்கள்” விருதுகள் இரவில் தனது பணியாளர்களின் சிறப்பை SLIIT கௌரவித்துள்ளது

 

2025ம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி கொழும்பு, ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்ற 2025ம் ஆண்டுக்கான SLIIT ஊழியர்களின் சிறப்பைப் போற்றிக் கொண்டாடும் “SLIIT நட்சத்திரங்கள்” என்ற நிகழ்வானது, பணியாளர்களின் சிறப்பை அங்கீகரித்து கொண்டாடும் SLIIT நிறுவனத்தின் வருடாந்த பாரம்பரியத்தில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. இந்த மதிப்புமிக்க நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட கல்வி சார்ந்த மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்ததுடன், நிறுவனத்தின் வெற்றியை முன்னெடுக்கும் பணியாளர்களைப் பாராட்டுவதில் SLIIT இன் நீடித்த அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

வருடாந்தம் இடம்பெறும் வகையில் அதன் தனித்துவம் வாய்ந்த நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட SLIIT நட்சத்திரங்கள், நிறுவனத்தை தொடர்ந்து மேம்படுத்தும் அர்ப்பணிப்பு, புத்தாக்கம் மற்றும் சேவையை வழங்கும் நபர்களை கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு விழா நன்றியுணர்வு, ஐக்கியம் மற்றும் தொழில்முறை மகத்துவத்தின் துடிப்பான கொண்டாட்டமாக அமைந்ததுடன், இது பணியாளர் மையப்படுத்தப்பட்ட SLIIT இன் வலுவான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்த விருதுகளில் கல்வி சார்ந்த மற்றும் கல்விசாரா பணியாளர்களுக்கான வெவ்வேறான பிரிவுகளின் கீழ் அவை வழங்கப்பட்டன. 10, 20 மற்றும் 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் சேவை விருதுகள் வழங்குவதில் இருந்து இது தொடங்கியது. இந்த கௌரவங்கள் நிறுவனத்திற்கு பல தசாப்தங்களாக சேவையை ஆற்றியுள்ள நீண்டகால அர்ப்பணிப்பு, விசுவாசம் மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு புகழாரம் சூட்டும் வகையில் அமைந்தன.

நிகழ்வில் அதனைத் தொடர்ந்து, பல பிரிவுகளில் சிறந்து விளங்கிய பணியாளர்களின் சிறந்த பெறுபேறுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த ஆசிரியர் விருதுகள், ஆண்டின் சிறந்த ஆராய்ச்சியாளர் விருதுகள் மற்றும் சிறந்த ஒட்டுமொத்த சாதனைக்கான விருதுகள் மூலம் கல்வி சார்ந்த பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கல்வித் தலைமைத்துவத்தில் மிகச் சிறந்த செயல்திறனை எடுத்துக்காட்டியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வழங்கும் கட்டமைப்பில் கல்வி சார்ந்த ஊழியர்களுக்கான வெற்றியாளர் மற்றும் சிறப்புத் தகுதி விருதுகள் அடங்கியிருந்ததுடன், அதே நேரத்தில் கல்விசாரா பிரிவில் வெற்றியாளர், சிறப்புத் தகுதி 1 மற்றும் சிறப்புத் தகுதி 2 ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இது அனைத்து மட்டங்களிலும் செயல்திறன் சார்ந்த விரிவான அங்கீகாரத்தை உறுதி செய்தது.

அவற்றை விடவும், கல்வி சார்ந்த மற்றும் கல்விசாரா பணியாளர்களின் செயல்திறன் விருதுகளுக்கான வெளிப்படையான, நியாயமான மற்றும் கடுமையான மதிப்பீட்டு செயல்முறையை உறுதி செய்வதில் அவர்களுடைய நேரம், நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் மதிப்பீட்டு குழு உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

மாலைப்பொழுதை அலங்கரிக்கும் வண்ணம், விருதுகளை வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து அனைவரையும் பரவசப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளால் மேடை கலகலப்பானது. சன்ன உபுலி நடன அக்கடமியின் திறமையான நடனக் கலைஞர்களும், புகழ்பெற்ற கலைஞரான சுப்புன் சி ஜெயலத் அவர்களும் ஆத்மார்த்தமான நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர், இது அரங்கத்தினரை மகிழ்வித்ததுடன், கொண்டாட்ட சூழ்நிலையை சிறப்பிக்கச் செய்தது. உற்சாகமான நடனங்கள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சமகால நிகழ்ச்சிகள் விருதுகள் இரவை அங்கீகாரம் மற்றும் கலை வெளிப்பாட்டின் மறக்கமுடியாத சங்கமமாக மாற்றியது.

இதனை வெறுமனே விருது வழங்கும் விழாவென்று கூறி விட முடியாது. 2025ம் ஆண்டுக்கான SLIIT நட்சத்திர விருதுகள் இரவானது நிறுவனத்தின் இதயமாக விளங்கும் பணியாளர்களுக்கு வழங்கும் ஒரு சக்திவாய்ந்த கௌரவமாக அமைந்தது. பல ஆண்டுகால அர்ப்பணிப்பை கௌரவித்து, தொழில்முறை சிறப்பைக் கொண்டாடி மற்றும் பகிரப்பட்ட பெருமை மற்றும் ஐக்கியத்தின் உணர்வை வளர்ப்பதன் மூலம், இந்த நிகழ்வானது உத்வேகமும், ஊக்கமும் கொண்ட சமூகமொன்றை வளர்ப்பதில் SLIIT நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. மாலைப்பொழுதின் முடிவில் அது உரத்து எதிரொலிக்கும் செய்தியொன்றையும் விட்டுச் சென்றது – SLIIT இன் தொடர்ச்சியான வெற்றி அதன் பணியாளர்களின் பேரார்வம், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டுப் பலத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது, என்பதுடன் ஒன்றுபட்டு உழைப்பதால் இன்னும் பெரிய சாதனை மைல்கற்கள் முன்னே காத்திருக்கின்றன என்பதே அந்த தெளிவான செய்தியாகும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading