Local

பலத்த காற்றுடன் கடும் மழைவீழ்ச்சி! – 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காகக் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வடக்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்தத் தாக்கம் காரணமாக அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்த வேகத்தில் வீசும் கடும் காற்றுடன் கூடிய திடீரென்ற கடல் கொந்தளிப்பு போன்றவற்றுக்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டுக்கு கிழக்காகவும் மேற்காகவும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading