இளம் பெண்ணின் இந்நாள் காதலனைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த முன்னாள் காதலன்! – திருமலையில் கொடூரம்
திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட காதல் விவகார வாக்குவாதம் இறுதியில் கொலையில் முடிந்தது.
நண்பர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் காதல் விவகாரம் தொடர்பில் வாக்குவாதப்பட்டுக்கொண்டு வந்தபோது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்துகொண்டு வந்த இளைஞர், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த மற்றைய இளைஞரை திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து கத்தியால் கழுத்தறுத்துக் கொலைசெய்துள்ளார்.
தனியார் வங்கியொன்றில் பணிபுரியும் இளம் பெண் (வயது 19) ஒருத்தியின் முன்னாள் காதலனுக்கும் தற்போதைய காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் தற்போதைய காதலனான திருகோணமலை – நீதிமன்ற வீதி, வில்லூன்றிப் பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஷன் (வயது 21) என்வரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தனுஷனை கழுத்தறுத்துப் படுகொலை செய்த குறித்த பெண்ணின் முன்னாள் காதலன் டானியல் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் துறைமுகப் பொலிஸார், “குறித்த பெண், முன்னாள் காதலனை 5 வருடங்களாகக் காதலித்துவிட்டு இறுதியில் ஏமாற்றியுள்ளார். வாள் வெட்டில் பலியான இந்நாள் காதலனை குறித்த பெண் ஒரு மாதமாகக் காதலித்து வந்துள்ளார். தீவிர விசாரணைகளின் பின்னர் ஆசிரியை ஒருவரின் மகளான குறித்த பெண்ணையும் அழைத்து விசாரணை செய்வோம்” என்று குறிப்பிட்டனர்.


