FeaturesLead NewsLocal

யாழ். சென்ற பஸ் மதவாச்சியில் கோர விபத்து! – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபச் சாவு; ஐவர் காயம்

 

மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியின் வஹமலுகொல்லேவப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் அதிசொகுசு பஸ் ஒன்றும் தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பஸ்ஸில் பயணித்த 8 பேர் காயங்களுக்குள்ளாகி மதவாச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நல்லூர் – கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சுகந்தி (வயது 52), அவரின் மகளும் கிளிநொச்சி, கரியாலை நாகபடுவான் மகா வித்தியாலய ஆசிரியையுமான அஜந்தன் கோபிகா (வயது 29) மற்றும் சதாசிவம் சுகந்தியின் மற்றொரு மகளான சத்யாவின் மகன் செல்வரஞ்சன் பிமிநாத் (வயது 12) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சுகந்தியின் கணவர் சதாசிவம், கோபிகாவின் இரண்டு மகள்கள், பிமிநாத்தின் தாய் செல்வரஞ்சன் சத்யா மற்றும் பிமிநாத்தின் சகோதரர் ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

ஜேர்மனியிலிருந்து வந்த செல்வரஞ்சன் சத்யாவின் குடும்பமும், யாழ்ப்பாணத்திலிருந்து தனியார் அதிசொகுசு பஸ்ஸில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து அவர்களை அழைத்துச் சென்ற உறவுகளுமே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் காயமடைந்த ஏனைய ஐவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் செல்வரஞ்சன் சத்யா பலத்த காயமடைந்துள்ளார் என்று அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தனியார் அதிசொகுசு பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மதவாச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading