Local

இலங்கை பொலிஸ் சேவை சர்வதேச மயப்படுத்தப்படும்!

” இலங்கை பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன  தெரிவித்தார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய  ஜனாதிபதி,

” உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பொலிஸ் சேவைகளோடு ஒப்பிடும்போது இலங்கை பொலிஸ் சேவையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளன.

பொலிஸ் திணைக்களம் எனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட சில மாத காலங்களுக்குள்ளாகவே அந்த வெற்றிகளை நோக்கி இலங்கை பொலிஸ் திணைக்களம் பயணிக்கின்றது. பொலிஸ் திணைக்களத்தில் உள்ளக ரீதியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பணியில் மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை பொலிஸார், இன்று மக்களின் நலன் பேணல் சேவைகளில் நிறைவேற்றும் சிறப்பான மனித நேய பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.” என்றும் கூறினார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் வரலாற்றில் மகளிர் பொலிஸ் படையணியொன்று பயிற்சியை நிறைவு செய்து பிரிந்து செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 586 மகளிர் கான்ஸ்டபிள்கள் மற்றும் 27 உதவி பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 616 பேர் இன்றைய தினம் பிரிந்து சென்றனர்.

விசேட திறமைகளை வெளிக்காட்டிய மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் ஜனாதிபதியால்  வழங்கப்பட்டதோடு, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஜனாதிபதிக்கு  நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும்

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading