Lead NewsLocalNorth

வடக்கில் இராணுவத்தினர் இருந்த இடங்களில் மனிதப் புதைகுழிகள்! – அனந்தி திடுக்கிடும் தகவல்

வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மிக நீண்ட வரலாறு இந்த மண்ணுக்கு உண்டு. மன்னார் புதைகுழி என்பது மனித குலத்திற்கு எதிரான மனங்களை உலுக்குகின்ற சம்பவமாக உள்ளது.

குறிப்பாக 26 இற்கு மேற்பட்ட குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் உட்பட பல எலும்புக்கூடுகள் அங்கு மீட்கப்பட்டுள்ளன. இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட எலும்புக்கூடுகளும் அங்கு மீட்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுக்குச் சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும். ஏனெனில் இலங்கை அரசில் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்துப் பகுதிகளிலும் மனிதப் புதைகுழிகள் உள்ளன.

எனவே, இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதிகளிலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

ஏனெனில் ஏராளமான மக்கள் காணாமல் போயுள்ளார்கள். எங்களிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை.

இன்று கூட இந்திய இராணுவத்தின் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடலில் வைத்தும், வீடுகளில் வைத்தும் தமது உறவுகள் காணாமல்போயுள்ளார்கள் என்று என்னிடத்தில் வந்து பதிவு செய்கின்றவர்கள் உள்ளார்கள்.

சர்வதேச நாடுகளின் உதவிகளை நாட வேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளார்கள். ஏனெனில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் காணாமல்போன தமது உறவுகளில் எச்சங்களாக இருக்கலாம் என்று அஞ்சுகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மண்டைதீவு உட்பட மேலும் பல தீவுகளில் மனிதப் புதைகுழிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசியல் தலைவர்களும், பொது அமைப்புக்களும் சர்வதேச உதவியை நாட வேண்டும்” – என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading