Local

கதையை மாற்றுகின்றார் பஸில்! – மொட்டு கட்சியிலும் மஹிந்த இல்லையாம்

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டதும், மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 50இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டனர்.

இவர்களுக்கான உறுப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் நாடாளுமன்றக் கலைப்பு அரசமைப்புக்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் நிலை சிக்கலாகியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு அமைய, மற்றொரு கட்சியில் உறுப்புரிமை பெற்றவரால், கட்சியில் நீடிக்க முடியாது. இதனால், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள், நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு நாங்கள் இன்னமும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை வழங்கவில்லை.

அவர்கள் எம்முடன் இணைய முன்வந்தனர். விண்ணப்பங்களைக் கையளித்தனர். ஆனால், இன்னமும் அவர்களுக்கு உறுப்புரிமை வழங்கப்படவில்லை” என்றும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading