World

புர்காவுக்கு தடைவிதித்த நாடுகளின் விபரம்

ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை இலங்கை தடை செய்துள்ளது.

ஈஸ்டர் அன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது.

இப்படியான சூழ்நிலையில் எந்தெந்த நாடுகளில் முகத்தை முழுமையாக மூடி, ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது என காண்போம்.

பிரான்சில்தான் முதல்முதலாக அதாவது 2011ஆம் அண்டு முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.

இதனை ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றமும் 2014 ஜூலையில் உறுதி செய்தது.

பின் 2018 ஆகஸ்ட் மாதம், டென்மார்க்கில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. இது அந்த நாட்டில் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

டென்மார்க் சட்டப்படி முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிந்தால், 157 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால் அபராத தொகை பத்து மடங்கு உயரும்.

நெதர்லாந்து 2018 ஜுனில் முகத்தை முழுமையாக மூடி அடை அணிவதை தடை செய்தது. பொது வீதிகளில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணியலாம். ஆனால்,பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது அவ்வாறு செல்ல முடியாது.

ஜெர்மனியில் கார் ஒட்டும் போது முழுமையாக முகத்தை மூட கூடாது.

ஆஸ்திரியாவில் அக்டோபர் 2017ஆம் ஆண்டு பள்ளிகள், நீதிமன்றங்களில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.

பெல்ஜியத்தில் முகத்தை மூடி ஆடை அணிவது ஜூலை 2011ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. பெல்ஜியம் சட்டப்படி பொது இடங்களான பூங்காக்கள் மற்றும் வீதிகளில் முகத்தை மூடி ஆடை அணிய கூடாது.

நார்வேயில் ஜூன் 2018ஆம் ஆண்டு கல்வி நிலையங்களில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா இயற்றப்பட்டது.

பல்கேரியா நாடாளுமன்றம் முகத்தை மூடி ஆடை அணியும் பெண்களுக்கு சலுகைகளை ரத்து செய்யும் சட்டத்தை இயற்றியது.

2015ஆம் ஆண்டு முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிந்த பெண்களால் மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து சாட், கெபோன், கேமரூனின் வடக்கு பகுதி, நைஜரின் டிஃபா பகுதி மற்றும் காங்கோ குடியரசில் முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.

அல்ஜீரியாவில் அரசு ஊழியர்கள் முகத்தை முழுமையாக மூடுவது அக்டோபர் 2018இல் தடை செய்யப்பட்டது.

சீனாவில் சின்ஜியாங்கில் பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவது, நீளமாக தாடி வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

உய்கூர் முஸ்லிம்களின் தாய்நிலம் சின்ஜியாங் பகுதி. அவர்கள் தொடர்ந்து பாகுபாட்டினை சந்தித்து வருவதாக கூறுகிறார்கள்.

இந்த பகுதியில் அரசுக்கும், இஸ்லாமிய குழுக்களுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading