Local

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்டுவேன்! – சந்திரிகா சீற்றம்

“ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் கொலைகார ராஜபக்ச கும்பலுடன் கைகோர்த்துள்ள மைத்திரி அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கு நான் உதவுவேன்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் இரகசியச் சந்திப்பு நடத்தியதாக வெளியான தகவல்கள் தொடர்பில் சந்திரிகாவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடும் பழக்கம் எனக்கு இல்லை. நாட்டில் இருக்கும் அரசமைப்புக்கு மதிப்பளித்து வெளிப்படையாகத்தான் எதையும் நான் செய்வேன்.

குமார வெல்கம மட்டுமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் பலர் என்னுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இறுதிச் சந்தர்ப்பம் வழங்கி கடிதம் எழுதினேன். அவர் அதற்கு உரிய பதில் வழங்கவில்லை.

எனது தந்தையும், தாயும், நானும் சேர்ந்து வளர்த்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து என்னைத் தூக்கி எறியும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால ஈடுபடுகின்றார். இந்த மோசமான செயலுக்கு அவர் பெரியதொரு பின்விளைவை அனுபவிப்பார்.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசை உருவாக்குவதற்காக நான் இரவு, பகல் பாடுபட்டேன். என்னைப் போன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பாடுபட்டார்கள்.

ஆனால், மைத்திரிபால, எனக்கு மட்டுமல்ல இந்த நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளார்.

கொலைகார ராஜபக்ச கும்பலுடன் சேர்ந்து நாட்டை நாசமாக்கிவிட்டார். மைத்திரி அணியினதும், மஹிந்த அணியினதும் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான பிரதிநிதிகள் தயாராகிவிட்டார்கள். அவர்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குவேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading