LocalWorld

சிதம்பரம் கைது! – வீட்டுச் சுவர் ஏறிக் குதித்து அதிகாரிகள் அதிரடி

ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தில் முன்பிணை நிராகரிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே கைதுசெய்யப்பட்டார்.

ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்பிணை மனுவையும் டில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இதையடுத்து இன்று புதன்கிழமை இரவு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரைத் தேடி சி.பி.ஐ. அதிகாரிகள் டில்லியில் உள்ள வீட்டுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்றனர். ஆனால், அவர் இல்லாததால் நோட்டீஸை வழங்கி விட்டுத் திரும்பினர் எனத் தகவல் வெளியானது. இதனால் ப.சிதம்பரம் எங்கு இருக்கின்றார் எனும் விவரம் தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில் சிதம்பரம் இன்றிரவு 8.15 மணியளவில் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், சட்டத்தரணிகளும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

ஆனால், அதற்குள்ளாக அவர் தனது டில்லி இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரைப் பின் தொடர்ந்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றனர். சிறிது நேரத்தில் சிதம்பரம் டில்லியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.

அவர் வீட்டுக்குள் சென்ற பிறகு வீட்டுக்கதவு மூடப்பட்டது. இதனிடையே சி.பி.ஐ. அதிகாரிகள் டில்லி வீட்டுக்கு வந்தனர். ஆனால், காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்றனர்.

அவர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்றனர். 20 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் குடியிருப்பின் பின்புறம், முன்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர். பின்னர் சிதம்பரத்தைக் கைதுசெய்வதற்காகக் கார் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் வீட்டின் வாசல் கதவு திறக்கப்பட்டு கார் உள்ளே கொண்டு வரப்பட்டது.

உடனடியாக அந்தப் பகுதியில் பெரிய அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் திரண்டனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகளால் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading