Local

மரண தண்டனைக்கு வலுக்கிறது எதிர்ப்பு! கத்தோலிக்க ஆயர் பேரவையும் போர்க்கொடி!!

இலங்கையில்  மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் யோசனைக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், இலங்கை கத்தோலிக்க ஆயர்  பேரவையும் போர்க்கொடி தூக்கியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் போதனைகளுக்கு அமைய, எந்தவொரு காரணத்திற்காகவும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேரவை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 14 ஆயர்கள் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

”  போதைப்பொருளை ஒழிப்பதற்கு கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கான நியாயமான செயற்பாடொன்றை அனைவரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க வேண்டும்.” என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள்  கண்காணிப்பகம் உட்பட சர்வதேச நாடுகளும்,  அமைப்புகளும் மரண தண்டனை அமுலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மரண தண்டனை அமுலுக்கு வந்தால், ஜி.எஸ்.பி.  வரிச்சலுகை  நிறுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, எத்தகைய அழுத்தங்கள், எதிர்ப்புகள் வந்தாலும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை நிச்சயம் நிறைவேற்றப்படும்  என ஜனாதபதி மைத்திரிபால  சிறிசேன  அறிவித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading