Local

பாதுகாப்பு மந்த நிலைமையே தாக்குதலுக்கு வழிகோலியது! – இராஜாங்க அமைச்சர் ருவான் தெரிவிப்பு

“கடந்த காலங்களில் பாதுகாப்புச் செயற்பாடுகள் மந்த நிலையில் கையாளப்பட்டன என்பதை நான் உணர்கின்றேன். பாதுகாப்பு அமைச்சில் ஒரு நிலையானதும் உறுதியானதுமான நிலைப்பாடு இருக்கவில்லை. அரச தலைவருக்கும், அரசுக்கும் இடையிலான முரண்பாடுகளே அதற்குக் காரணம் என்று நான் நினைக்கின்றேன். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நான் இருந்தாலும், தீர்மானம் எடுக்கும் அதிகாரம் எனக்கு இருக்கவில்லை.”

– இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நேற்றுச் சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“2017 ஆம் ஆண்டு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் மோதல் தொடர்பாகப் பேசப்பட்டது. பயங்கரவாத நபர்கள் தொடர்பாகப் பேசப்படவில்லை. அப்போது சட்டம் ஒழுங்கு அமைச்சும் வேறு அமைச்சரிடம் இருந்தது. ஈஸ்டர் தாக்குதல் ஒன்று இடம்பெறும் என்ற காரணிகள் பேசப்படவில்லை. தாக்குதலின் பின்னர்தான் இந்த தாக்குதல் தொடர்பாக முன்கூட்டிய தகவல்கள் பகிரப்பட்டமை குறித்து அறிந்து கொண்டேன்.

தாக்குதலின் பின்னர் முதல் பதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்ட எவரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. பாதுகாப்பு செயலாளரை தொடர்புகொண்டபோது அவர்களும் களத்தில் இருந்னர். தாக்குதல் இடம்பெற்ற இடங்களில் அதிகாரிகள் இருந்தனர்.

பின்னர் கூட்டப்பட்ட பாதுகாப்பு கூட்டத்தில் இந்தத் தாக்குதல்கள் நிலைமைகள் குறித்து பேசினோம். பிரதமரும் தொலைபேசியில் என்னிடம் தொடர்புகொண்டு பேசினார். கொழும்புக்கு வெளிப் பிரதேசத்தில் இருக்கின்ற காரணத்தால் அவர் வந்தவுடன் உடனடியாகக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அவர் கொழும்புக்கு வந்தவுடன் பாதுகாப்பு கூட்டத்தை கூட்டக் கூறினார். ஆனால், அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. ஒரு மணிநேரத்தின் பின்னர் மீண்டும் பிரதமர் அழைத்தார். அப்போதும் பாதுகாப்பு அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை.

மூன்றாவது தடவையா பிரதமர் தொலைபேசியில் அழைத்து நீங்கள் இங்கு வரவில்லை என்றால் நான் அங்கு வரவா? எனக் கேட்டார். இங்கு நிலமைகள் சரியில்லை, நீங்கள் இங்கு வந்தால் நல்லது எனக் கூறினேன். அவர் பாதுகாப்பு அமைச்சுக்கு வந்தும் காத்திருந்தார். பின்னரே கூட்டம் நடத்தப்பட்டது.

நான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில்ல் எனக்கிருந்த அதிகாரங்கள் முப்படையோ அல்லது புலனாய்வு அதிகாரமோ அல்ல. நலன்புரி, மற்றும் சில சாதாரண விடயங்களை நான் கையாள்கிறேன்.எனக்கும் பாதுகாப்பு கூட்டத்தில் பேசும் விடயங்களே தெரியும். புலனாய்வு குழுக் கூட்டங்களில் பேசும் விடயங்களும் தெரியும். முப்படை அதிகாரங்கள் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் அரச தலைவரிடமே உள்ளது.

கடந்த ஆண்டு அரசியல் புரட்சியின் பின்னர் என்னை பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. அதற்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்தேன். 51 நாள்கள் அரசியல் பிரச்சினையில் அரசுக்கும் அரச தலைவருக்கும் இருந்த முரண்பாடுகள் காரணமாக அதன் பின்னர் என்னை அழைக்கவில்லை.

பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் அப்போது காத்தான்குடி பள்ளிவாசல் மோதல் மற்றும் அடிப்படிவாத குழுக்கள் குறித்தும், சிரியாவுக்குச் சென்ற குடும்பம் தொடர்பாகவும் பேசப்பட்டது. அதற்கு அப்பால் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகப் பேசப்படவில்லை. முஸ்லிம் அடிப்படைவாதம் என்ற கதைகளும், சிரியா சென்ற குடும்பம் மற்றும் காத்தான்குடி பிரதேச சம்பவம் ஆகிய விடயங்கள் மட்டுமே பேசப்பட்டது. சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தொடர்பாகப் பேசியுள்ளோம். பயங்கரவாதம் தொடர்பாகப் பேசவில்லை.

மட்டக்களப்புக்கு நான் சென்றபோது பல முஸ்லிம் மக்கள் கூறினார்கள். ஆனால், காத்தான்குடியின் அமைதியின்மை தொடர்பாக ஏற்கனவே அறிந்து வைத்திருந்தோம். ஆனால், பயங்கரவாத அமைப்பொன்று உருவாவது பற்றி அறிந்திருக்கவில்லை.

பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் அரசியல் பிரச்சினைக்கு முன்னர் அதாவது ஒக்ரோபர் 2 ஆம் திகதி கலந்துகொண்டேன். பாதுகாப்புப் புலனாய்வுக் கூட்டத்திலும் அரசியல் பிரச்சினைக்கு முன்னரே கலந்துகொண்டேன். நான் பாதுகாப்புச் செயலாளரிடம் இது தொடர்பாகப் பேசினேன். பாதுகாப்புச் சபைக் கூட்டம் கூட்டப்படுவது இல்லை என அவர் கூறினார். முப்படை மற்றும் புலனாய்வுத்துறையுடன் பேசி ஜனாதிபதி தேவைப்பட்டால் பேசித் தீர்மானம் எடுக்கின்றார் என்றார்.

ஜனாதிபதியிடம் இது பற்றி நேரடியாகக் கேட்கவில்லை. அப்போது இருந்த அரசியல் நெருக்கடியில் ஒரு மட்டத்தில் முரண்பாடுகள் இருந்த காரணத்தால் என்னை அழைக்காது இருக்க அது காரணமாக இருந்தது என நினைத்தேன். ஆனால், பாதுகாப்புக் குழுக் கூட்டம் கூட்டப்படவில்லை என்பதை செயலாளர் மூலமாக அறிந்துகொண்டேன்.

புலனாய்வுக் கூட்டங்கள் தொடர்பாக மார்ச் மாதத்தில் கேட்டேன். அடுத்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால், அழைக்கப்படவில்லை. அரசியல் முரண்பாடுகள்தான் காரணமாக இருக்கும் என நினைத்தேன். எனக்குக் கூட்டங்கள் நடைபெறுவது தெரியும். ஆனால், எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. பாதுகாப்புச் செயலாளரை வினவினேன். வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எனக்கு அதிகாரங்கள் இல்லை. எனினும், நான் அதிகாரிகளுடன் கேட்டேன்.

தொடர்பாடல் இல்லாமையே காரணம். புலனாய்வுத்துறையினர் வெவ்வேறாக செயற்படுவது எனக்குத் தெரிந்தது. 2015 தொடக்கம் இப்போது வரையில் 5 பாதுகாப்புச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதுவெல்லாம் குறைபாடுகள்தானே. செவ்வாய்க்கிழமை கூட்டங்களில் நான் கலந்துகொண்டேன். சில நேரங்களில் வேறு வேளைகளில் இருந்தால் நான் செல்ல மாட்டேன். இவை அரசியல் பிரச்சினைக்கு முன்னர். இந்தக் கூட்டங்களில் பேசும் விடங்களை பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் கொண்டு செல்லுவேன்.

காத்தான்குடி சம்பவத்தில்தான் சஹ்ரான் தொடர்பாக அறிந்துகொள்ள முடிந்ததே தவிர அவர் பயங்கரவாதச் செயற்பாடுகளில் இருப்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. தாக்குதலின் பின்னரே அது தொடர்பான புலனாய்வுக் கடிதம் பற்றி அறிந்தேன். தாக்குதலின் பின்னர் நானாகவே கேட்டேன். அப்போதுதான் கடிதம் கிடைத்தது என்று கூறினர். ஏன் எனக்குக் கூறவில்லை எனக் கேட்டேன். எமது கடமை உங்களைப் பாதுகாப்பது; மாறாக உங்களுக்குக் கூறுவதில்லை என அதற்கும் பதில் கூறினார்கள்.

அரச புலனாய்வு அதிகாரிகளோடு அவ்வப்போது பேசிக்கொள்வோம். ஆனால், அவர்களின் பொறுப்பில் அவர்களின் தொடர்பாடல் கட்டமைப்பு ஒன்று உள்ளது. அவ்வப்போது பேசி சம்பவங்கள் தொடர்பாக அறிவிப்போம்.

தாக்குதல் குறித்த தகவல் ஏப்ரல் 4ஆம் திகதி கிடைத்து 9 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் அது தொடர்பாக எதுவும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது வருத்தமளிக்கின்றது, எனக்கு எந்தத் தகவலையும் எவரும் வழங்கவில்லை. முன்னரே இது தொடர்பாகப் பகிரப்பட்டுள்ளது என்பதைத் தாக்குதலின் பின்னரே அறிந்துகொண்டேன்.

தாக்குதலின் பின்னர் நான் கேட்டேன், பிரதமர் பார்த்துக்கொண்டு உள்ளார், பாதுகாப்பு சபைக் கூட்டங்களை கூட்டுங்கள் என கூறினேன். ஆனால், சற்றுப் பொறுங்கள் எனக் கூறிக்கொண்டு இருந்தனர். அப்போது ஜனாதிபதி நாட்டில் இல்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாக பிரதமரே எனக்கு அறிவித்தார். பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தினார்.

தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பிரதமர், பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் அழைக்கப்படவில்லை. அதை நான் அறிந்திருக்கவில்லை, பொலிஸ்மா அதிபரை ஒருமுறை சந்தித்தபோது அவர் கேட்டார். எனக்கு அழைப்பு வரவில்லை என அப்போது நான் கூறினேன். தனக்கும் அழைப்பு வரவில்லை என்று கூறினார். நான்கரை ஆண்டுகளில் எனக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டது. அதற்கு அப்பால் என்னால் செயற்பட முடியவில்லை. 2015ஆம் ஆண்டு எனக்கு அமைச்சு வழங்கப்பட்ட காலத்தில் எனக்கான அதிகாரங்கள் ஊடகங்களில் வெளிவந்தது. இருப்பினும் எனது எல்லைக்குள் எனது கடமைகளை நான் செய்துள்ளேன்.

இந்தக் காலங்களில் பாதுகாப்புச் செயற்பாடுகள் மந்த நிலையில் கையாளப்பட்டது என்பதை நான் உணர்கிறேன். பாதுகாப்பு அமைச்சின் ஒரு நிலையான அல்லது உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை. அவ்வப்போது அதிகாரிகள் மாற்றப்படுகின்றமை என்பதும் முரண்பாடான காரணிகளாக இருந்தது. ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இடையிலான முரண்பாடுகள் இதற்குக் காரணம் என்று கூறமுடியும்.

இன்ஸாப் என்ற பயங்கரவாதி தாக்குதலை நடத்த முன்னர் தனது மனைவிக்கு குரல் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சில காரணிகளைக் கூறியுள்ளார். சிரியா பிரச்சினை, மியன்மார் மற்றும் கிரைஸ்ட்சேர்ச் தாக்குதல் குறித்தும் பேசியுள்ளார். இது சி.ஐ.டி. எனக்குக் கூறிய விடயங்கள். அதன் அடிப்படையில்தான் நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் வகையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என்று கூறினேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading