Local

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு ‘பனை நிதியம்!’ – பிரதமர் தலைமையில் ஆரம்பம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ‘பனை நிதியம்’ நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

போரால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வாதாரம், மீள்குடியமர்வு, விவசாயம், உட்கட்டுமானம் ஆகியனவற்றின் மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு, திட்டங்களை இரு ஆண்டுகள் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2019 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் 250 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.

‘பனை நிதியம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிதியத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியத்தை ஆரம்பித்தார்.

ஆரம்ப நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொருளாதார மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அமைச்சின் செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.

இந்த நிதியம் வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும், எதிர்காலத்தில் புலம்பெயர்ந்தோர் நிதியை நேரடியாக இந்த நிதியத்துக்குக் கொடுக்கும் வகையிலான ஏற்பாடுகளும் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading