Local

ரணில் தரப்பிலிருந்தே 5 பேர் மஹிந்தவுடன் கைகோர்ப்பர்! – சஜித்தின் கருத்துக்கு தினேஷ் பதிலடி

“ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சுப் பதவிகள் கிடைக்காதவர்கள் உள்ளிட்ட அந்த அணியைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் விரைவில் இணையவுள்ளனர்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியிலிருந்தும் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசுடன் ஜனவரி மாத முதல் வாரத்தில் இணைய உத்தேசித்துள்ளனர் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது அணியிலிருந்து எவரும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையமாட்டார்கள். அந்த அணித் தரப்பைச் சேர்ந்தவர்களே எம்முடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் சிலர் அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்திலும் உள்ளனர். அதிருப்தியடைந்து எம்மை நம்பி வருபவர்களை நாம் இரு கரம் கூப்பி வரவேற்போம்.

விரைவில் மீண்டும் நாம் ஆட்சிப்பீடம் ஏறுவோம். இது உறுதி” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading