Doc990 தளத்தில் மூலோபாய முதலீட்டை மேற்கொண்டு, டிஜிட்டல் சுகாதாரத் துறையில் கால்பதிக்கும் சன்ஷைன் ஹெல்த்கெயார்
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா லிமிடெட், ‘Doc990’ இன் தாய் நிறுவனமான டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் (DHPL) நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது. இந்த முதலீடானது, சன்ஷைன் நிறுவனம் தனது மருத்துவ வணிக வலையமைப்பைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். அத்துடன், மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சுகாதாரத் துறையில் சன்ஷைன் நிறுவனம் பலமாக தடம் பதிப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது.
டயலொக் ஆக்சியாட்டா நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான DHPL ஆல் இயக்கப்படும் ‘Doc990’, மொபைல் Apps, இணையதளம் மற்றும் தொலைபேசி அழைப்பு அலைவரிசைகள் மூலம் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ சேவை வழங்குநர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தளங்களில் ஒன்றான Doc990, மருத்துவர் சந்திப்புகளுக்கான முன்பதிவு, டிஜிட்டல் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை எளிதாக்குகிறது. இதன் மூலம் நோயாளிகள் தங்களுக்குத் தேவையான மருத்துவ பராமரிப்புகளை மிகவும் வசதியாகவும் சிரமமின்றியும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முதலீடானது சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தின் வளர்ச்சி வியூகத்தின் ஒரு இயல்பான அடுத்தகட்ட நகர்வாகும். இந்நிறுவனம் கொண்டுள்ள மருந்து உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), மருத்துவ உபகரணங்கள், மருந்து விநியோகம் மற்றும் சில்லறை மருந்தகச் செயல்பாடுகள் போன்ற பலமான திறன்களுக்கு இந்த முதலீடானது மேலும் வலுசேர்க்கிறது. இலங்கையின் டிஜிட்டல் சுகாதாரத் துறையில் கால்பதிப்பதன் மூலம், சன்ஷைன் நிறுவனம் தனது பல்வேறு மருத்துவ வணிகப் பிரிவுகளை வலுப்படுத்துவதுடன், நோயாளிகளுடன் நேரடியாக டிஜிட்டல் முறையில் தொடர்புகொள்வதற்கான ஒரு பலமான பாலத்தையும் உருவாக்கியுள்ளது.
சன்ஷைன் நிறுவனத்தின் மருத்துவ வணிக விரிவாக்கங்களில் கூட்டுப்பங்காண்மைகள் எப்போதும் ஒரு மிக முக்கியப் பங்கை வகித்துள்ளன. அதன் மருந்து விநியோக வணிகமானது, சர்வதேச நிறுவனங்களுடன் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகப் பேணப்பட்டு வரும் நீண்டகால மற்றும் நம்பகமான உறவுகளின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, 2020 ஆம் ஆண்டில், சன்ஷைன் நிறுவனம் தனது சுகாதாரச் செயல்பாடுகளை Akbar Brothers நிறுவனத்துடன் இணைத்தது. இந்தக் கூட்டு நடவடிக்கை அவர்களின் மருந்து உற்பத்தித் திறனைப் பல மடங்கு வலுப்படுத்தியதுடன், உற்பத்தி முதல் விநியோகம் வரை முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட மருத்துவ வணிகத்தை கட்டியெழுப்ப உதவியது.
இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் சர்வதேச நிதி நிறுவனத்துடன் (IFC) மேற்கொள்ளப்பட்ட ஒரு பங்குகளின் அடிப்படையிலான கூட்டுப்பங்காண்மை, மருந்து உற்பத்தி, விநியோக உட்கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சில்லறை மருந்தக வணிகங்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்குப் பெரும் ஆதரவாக அமைந்தது. அண்மையில்,, சன்ஷைன் நிறுவனமானது இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான Zydus Lifesciences உடன் கைகோர்த்து, ஹொரணையில் ஒரு அதிநவீன மருந்து உற்பத்தி ஆலையை நிறுவியது. இது இலங்கையின் உள்நாட்டு மருந்து உற்பத்தித் திறனை மேலும் பலமடங்கு வலுப்படுத்தியுள்ளது.
இந்த முதலீடு குறித்து சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் கருத்து தெரிவிக்கையில், “கடந்த பல ஆண்டுகளாகவே, பலமான கூட்டுப்பங்காண்மைகளின் மூலமாகவே நாங்கள் சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தைக் கட்டியெழுப்பியுள்ளோம். சர்வதேச மருந்து நிறுவனங்களுடனான எங்களது நீண்டகால உறவுகள் முதல், அக்பர் பிரதர்ஸ், IFC மற்றும் Zydus ஆகிய நிறுவனங்களுடனான எங்களது கூட்டு நடவடிக்கைகள் வரை, இலங்கையின் சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் எங்களது குறிக்கோளைப் பகிர்ந்துகொள்ளும் பங்காளர்களுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். எங்களின் இந்த Doc990 மீதான முதலீடும் அதனைப் போன்றதொரு வெற்றிகரமான அணுகுமுறையின் தொடர்ச்சியாகும். இது டயலொக் நிறுவனத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பத் திறனையும், எங்களது பலமான மருத்துவ விநியோகத் திறன்களையும் ஒன்றிணைக்கிறது. இந்த இரண்டு பலங்களின் இணைப்பானது, சுகாதாரச் சேவைகளை நோயாளிகளுக்கு மிக அருகில் கொண்டு சேர்ப்பதற்கும், அவர்களின் மருத்துவ பராமரிப்புகளை மிகவும் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றுவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டுப்பங்காண்மை குறித்து டயலொக் ஆக்சியாட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுபுன் வீரசிங்க கருத்து தெரிவிக்கையில்,, “தொழில்நுட்பத்தின் வாயிலாக மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முறையை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடனேயே ‘Doc990’ தளம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்தத் தளம் தனது அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதையில் நுழையும் தருணத்தில்,, சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தின் இந்த முதலீடானது ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இது எங்களது டிஜிட்டல் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், நோயாளிகளின் ஒட்டுமொத்த மருத்துவப் பயணத்தில் டிஜிட்டல் ஆரோக்கியத்தின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும் சிறந்த வாய்ப்புக்களை உருவாக்குகிறது. இதன் மூலம், இலங்கையில் மிகவும் நெருக்கமான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நவீன டிஜிட்டல் சுகாதாரக் கட்டமைப்பை எங்களால் உருவாக்க முடியும்” என தெரிவித்தார்.
Doc990 மீதான இந்த முதலீடு, சன்ஷைன் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது. இது இலங்கையில் வாடிக்கையாளர்கள் மிக எளிதாக அணுகக்கூடிய, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நவீன மருத்துவக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் சன்ஷைன் நிறுவனம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

You must be logged in to post a comment.