Lead NewsLocal

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பு! – 40 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது பிரேரணை

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று மாலை 40 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலையடுத்து இலங்கையில் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்த அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு அனுமதி அளிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டது. ஆனால், வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அதில் பங்கேற்றனர். கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

வாக்கெடுப்பின்போது ஆதரவாக 42 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

சபையில் இருந்த ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 42 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading