LocalNorth

ஈ.பி.டி.பியின் மின்சார நிலுவை ஒரு கோடி ரூபாவை தாண்டியது! – வசூலிக்க எந்தவித நடவடிக்கையும் இல்லை

ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியேட்டர் மற்றும் ஊடக நிறுவனங்கள் இயங்கிய கட்டடங்கள் என்பவற்றுக்காக செலுத்தவேண்டிய நிலுவைப் பணம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என்று மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிதர் தியேட்டருக்கு 1998ஆம் ஆண்டிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை 85 இலட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சதம் மின்சார சபைக்குச் செலுத்தப்படவேண்டியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையே மின்சார சபைக்குப் பணம் செலுத்தப்படவில்லை.

அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத்தில் இயங்கிய அலுவலகம், பஸ்தியன் சந்தியில் இயங்கிய அலுவலகம், யாழ்ப்பாண நகரில் காங்சேன்துறை வீதியில் இயங்கிய அலுவலகம் ஆகியவற்றுக்கும் மின்சார விநியோகம் வழங்கப்பட்டிருந்தது. அதற்குரிய நிலுவைப் பணமும் செலுத்தப்படவில்லை.

ஈ.பி.டி.பியினரிடம் நீண்ட காலமாக நிலுவைப் பணம் அறவிடப்படாதமையை உறுதி செய்த இலங்கை மின்சார சபையினர் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.

பொதுமகன் ஒருவர் மூன்று மாதங்களாக மின்நிலுவை செலுத்தவில்லை என்றால் கேட்டுக் கேள்வியின்றி மின் இணைப்பை மின்சார சபையினர் துண்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading