Local

ஜெனிவா தீர்மானம் பக்கச்சார்புடையது! – சாடுகின்றார் கோட்டாபய

“ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் துரதிஷ்டவசமானது – பக்கச்சார்பானது.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்,

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க நான் தயாராகவே இருக்கிறேன். மேலதிக விவரங்களை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமே கேட்கவேண்டும்.

இப்போதைய நிலைமையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைவிட, ஸ்திரமான அரசை எவ்வாறு ஸ்தாபிக்கவேண்டும் என்பதே முக்கியமானதொரு விடயமாகும்.

கொள்கை ரீதியாக முதலில் நாம் ஒன்றிணைய வேண்டும். மேலும், ஜெனீவா தொடர்பாகவும் கருத்து வெளியிட வேண்டும்.

அதாவது, உலகிலுள்ள முக்கியமான நாடுகள் பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்து அதற்கு எதிராகப் போரிட்டுள்ளன. அப்படியான நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான தமது போராட்டங்களை வெற்றிகரமான ஒன்றாகவே இதுவரை கருதுகின்றன.

ஆனால், உலகிலுள்ள மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பை நாம் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தோற்கடித்துள்ளோம்.

இந்நிலையில், இந்த பயங்கரவாதத்தைத் தோற்கடித்த தரப்பினருக்கு எதிராகவே சர்வதேசத்தினால் தற்போது தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

இது மிகவும் பக்கச்சார்பானதும் துரதிஷ்டவசமானதுமான ஒரு விடயமாகவே நாம் கருதுகிறோம்.

நாம் யுத்தத்தை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. யுத்தத்துக்குப் பின்னர் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வழிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டோம்.

இவை அனைத்தும் மறக்கப்பட்டுள்ளன. இந்த அரசு எந்தவொரு தரப்புக்கும் நன்மையளிக்கும்வகையில் செயற்படவில்லை” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading