Local

கோட்டாபயவைக் கண்டு கதிகலங்குகின்றது அரசு! – ‘மொட்டு’வின் வேட்பாளர் நியமனத்தில் மாற்றமில்லை என அடித்துக் கூறுகின்றார் மஹிந்த

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சவைக் கண்டு இந்த அரசு கதிகலங்குகின்றது. அதனால்தான் கட்டுக்கதைகளை ரணில் தரப்பினர் அவிழ்த்து விடுகின்றனர். எனவே, எமது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவே. அவரின் நியமனம் மாற்றப்படவே மாட்டாது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று தேசிய மாணிக்க மற்றும் ஆபரண கண்காட்சி திறக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன முன்னணி இணைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரு கட்சிகளின் அடையாளத்தையும் பாதுகாத்து எமது ஜனாதிபதி வேட்பாளரை வெல்ல வைக்க விரும்புகின்றோம். ஆயினும்கூட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடான எங்கள் கலந்துரையாடல்களும், கோட்டாபய ராஜபக்சவுடன் அவர்கள் நடத்திய கலந்துரையாடல்களும் மிகவும் வெற்றிகரமாக உள்ளன.

இந்த அரசு ஏற்கனவே கோட்டாபய ராஜபக்சவுக்குப் பயந்துள்ளது. அதனால்தான் எங்களைத் தாக்கும் வேலைகளைச் செய்கின்றனர். இருப்பினும், சரியான வேட்பாளரை சரியான நேரத்தில் நாம் வழங்கினோம். ஜே.வி.பி யும் தனது வேட்பாளரை முன்வைத்தது. இருப்பினும் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கவில்லை . இப்போது அவர்கள் கட்சி யாப்பை முன்வைத்து நெருக்கடியை மறைக்க முயற்சிக்கின்றனர்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading