FeaturesLead NewsLocal

கோட்டாபயவைவிட சஜித்தின் அறிக்கை முன்னேற்றகரமானது! – தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்தில் சஜித் பிரேமதாஸ தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது,

“சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல முன்னேற்றகரமான விடயங்கள் உள்ளன. நாம் எதிர்பார்த்த விடயங்கள் பலவும் அதில் உள்ளன. புதிய அரசமைப்பு, மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீள ஒப்படைப்பு, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, வேலைவாய்ப்புக்கள் உட்பட நாம் எதிர்பார்த்த பல விடயங்கள் அதில் உள்ளன.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நாம் அலசி ஆராய்கின்றோம். சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிக்கையூடாகத் தெரிவிக்கவுள்ளோம்” – என்றார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் ஆரோக்கியமானதும் திருப்திகரமானதும் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியதுமான விதத்தில் சஜித் பிரேமதாஸ தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கைகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடத்திய கடந்த காலப் பேச்சுகளில் நாம் கேட்டுக்கொண்ட விடயங்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் எம்முடன் தனிப்பட்ட ரீதியிலும் மற்றும் உத்தியோகப்பற்றற்ற வகையிலும் நடத்திய பேச்சுக்களின் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து வந்துள்ள கோரிக்கைகள் தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading