FeaturesLead NewsLocal

கூட்டமைப்பு கைகொடுத்ததால் மீளவும் தப்பிப்பிழைத்தது அரசு! – மண்கவ்வியது ஜே.வி.பியின் பிரேரணை

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி.) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் குறித்த பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்தது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நேற்றும் இன்றும் விவாதங்கள் நடைபெற்றன.

விவாதங்களையடுத்து இன்று மாலை 6.30 மணியளவில் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிர்க்கட்சி வரிசையிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் கடந்த வருடம் ஒக்டோபர் 26 அரசியல் சதிப் புரட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மைத்திரி – மஹிந்த அணிப் பக்கம் தாவிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும் அரசை எதிர்த்துப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சி வரிசையிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன், பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எதிரணிப் பக்கம் தாவிய விஜயதாஸ ராஜபக்ச, தினேஷ் கன்கந்த, எஸ்.பி.நாவின்ன, அசோக பிரியந்த மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க உள்ளிட்ட ஆளும், எதிரணித் தரப்புகளைச் சேர்ந்த 13 பேர் வாக்களிப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இந்தநிலையில், பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலே இருந்தது.

இன்று காலையும் மாலையும் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசு மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.

குறித்த பிரேரணைக்கு எதிராக அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரரணை தோல்வியடைந்துள்ளது எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார்.

இதையடுத்து நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading