FeaturesLead NewsLocal

சி.ஐ.டி. அதிரடி ஆட்டம்; ஹேமசிறி, பூஜித கைது! – கொழும்பு அரசியலில் பரபரப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் இன்று அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொரளையிலுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நாரஹேன்பிட்டியவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இன்று பிற்பகல் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளே இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வருமாறு இருவருக்கும் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், திடீர் சுகயீனம் காரணமாக ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவிலும், பூஜித ஜயசுந்தர பொலிஸ் வைத்தியசாலையிலும் இன்று சேர்க்கப்பட்டிருந்தனர். இதனால் இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையாகவில்லை.

இந்தநிலையிலேயே இன்று பிற்பகல் இரண்டு வைத்தியசாலைகளுக்கும் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக இவர்கள் இருவரையும் கைதுசெய்யுமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு சட்டமா அதிபர் தப்புல டீ. லி​வேரா நேற்று அனுப்பிய கடிதம் ஒன்றிலேயே இந்த உத்தரவை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரினதும் கைதையடுத்து கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading