Lead NewsLocal

ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்! – வதந்திகளை நம்ப வேண்டாம் என்கிறார் மைத்திரி

“இவ்வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள்தான். மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும். இவ்வருடம் விரைவில் அந்தத் தேர்தல் நடத்தப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். இந்த இரண்டு தேர்தல்களுக்கும் முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடக்கும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.

இந்த மூன்று தேர்தல்களும் நீதியாக நடைபெற அனைத்துத் தரப்புகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறவுள்ளது எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பங்காளிக் கட்சியாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் எனவும் சிலர் விசமத்தனமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். இந்நிலையில், எனது அனுமதி இல்லாமல் கட்சியில் உள்ள பலர் பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் நான் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்” – என்றார்.

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் போட்டியிட மாட்டீர்களா?’ என்ற கேள்விக்கு, “அதுதானே சொன்னேன் எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என்று. இந்தக் கருத்துக்குள் நான் மீண்டும் போட்டியிடுவேனா? இல்லையா? என்ற கேள்விக்கான பதிலும் அடங்கியுள்ளது. அதாவது நான் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்தும் நான்தான் முடிவெடுக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading