LocalNorth

‘விசாரணை முகாம்’களிலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்

மன்னாரில் உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அது தங்களுக்கு விருப்பம் இல்லை எனவும், போர்க்காலப் பகுதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட முகாம்களிலும் மனித எலும்புக்கூடுகள் இருக்கலாம் எனவும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி எம்.உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் கடற்படை மற்றும் இராணுவம் இன்னும் மக்களுடைய காணிகளிலும் அதே நேரத்தில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பாரிய முகாம்களை தற்காலிகமாக அமைத்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக பல இராணுவ, கடற்படை முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாங்கள் காணாமல்போன எங்களுடைய பிள்ளைகளைத் தேடி அலைகின்றோம். எங்கள் உறவுகள் எங்கு இருக்கின்றார்கள்? படையினர் அந்த முகாம்களை நிரந்தரம் ஆக்கிவிட்டார்கள் என்றால் அந்த முகாம்களுக்குள் இருந்து எத்தனையோ ஆயிரம் எலும்புகூடுகள் வரப் போகின்றன.

அதனால்தான் அவர்கள் மறைமுகமாக அந்தக் காணிகளை தாங்களே கையாள வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஒருபோதும் இந்தக் காணிகளை நிரந்தரமாக வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன் மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பத்தில் மக்கள் வங்கியாக இருந்த பகுதியை இராணுவம் முகாம் ஆக்கி வைத்திருந்தது.

அதேபோன்று சனிவிலச் கடற்படை முகாம், பள்ளிமுனை முகாம் ஆகியவற்றில் எல்லாம் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது.

ஏன் என்றால் அந்த முகாம்களில் எல்லாம் போர்க்காலத்தில் மக்களைக் கூட்டிச் சென்று விசாரித்த இடங்கள். அதுக்குள்ளும் நிறைய எலும்புக்கூடுகள் வரலாம் எனச் சந்தேகம் இருக்கின்றது.

அதனால் அந்தக் காணிகளை கடற்படைக்கோ, இராணுவத்துக்கோ எக்காரணம் கொண்டும் வழங்க வேண்டாம்.

வழங்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு நிரந்தரம் ஆகிவிடும்; எங்களுக்கு எந்த முடிவும் கிடைக்காது.

எனவே, பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading