IPL போட்டியில் 100-வது வெற்றியை ருசித்த தோனி!

‘ஓல்ட் ஈஸ் கோல்ட்’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள். இந்த ஐபிஎல் தொடரிலேயே வயதான வீரர்களை அதிகம் கொண்ட அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், இளமைத் துடிப்பும், ஆக்ரோஷமான பேட்டிங் வரிசையும், அபாரமான பந்துவீச்சு திறமையும் கொண்ட மும்பை இந்தியன்ஸை அனாயாசமாக வென்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி பெற்றுக்கொடுத்த 100-வது வெற்றி இது. ஆனால் தோனியைக் கேட்டால், இதுவரை ஐபிஎல்லில் தான் பெற்ற வெற்றிகளிலேயே இதுதான் மிகச் சிறந்தது என்று அடித்துக் கூறுவார். இப்போட்டிக்கு முன்னதாக அத்தனை சோதனைகளை அவர் சந்தித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதிச் சுற்றில் இந்தியா வீழ்ந்த பிறகு, தோனி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் அரங்குக்கு வரவில்லை. அந்த வகையில் 437 நாட்களுக்கு பிறகு நேற்று கிரிக்கெட் அரங்கில் மீண்டும் நுழைந்தார் தோனி.
தொடர் தொடங்குவதற்கு முன்பே நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த ரெய்னா வெளியேறியது, ஹர்பஜன் சிங் ஆட முடியாது என அறிவித்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தோனிக்கும் பல சறுக்கல்கள்.
தோனியுடனான மோதலால்தான் ரெய்னா வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. ஆனால் எது நடந்தாலும் தோனியின் பின்னால் தாங்கள் இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உறுதியாக இருந்தார். இந்த உறுதிக்கு தோனி கொடுத்த பரிசு இந்த வெற்றி.
டாஸில் வென்றதும் பந்துவீச்சை தேர்ந்தெடுத்த தோனி, முதல் 4 ஓவர்களில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைக் கடந்தபோதும் பதறவில்லை. மாறாக பந்துவீச்சாளர்களுடன் பேசி அவர்களின் டென்ஷனைக் குறைத்தார். இது மிகச்சிறந்த பலனைக் கொடுத்தது. அடுத்தடுத்த ஓவர்களில் மீண்டுவந்த சென்னை பந்துவீச்சாளர்கள் மெல்ல மெல்ல மும்பையின் கழுத்தை இறுக்கத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் 10.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களை எடுத்திருந்த மும்பை அணி, கடைசியில் தோனியின் வலைக்குள் விழுந்தது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் அதன் ரன்குவிக்கும் வேகமும் குறைந்தது. கடைசியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களுக்குள் கட்டுப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை அணி 6 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்தபோதிலும் டுபிளெஸ்ஸி மற்றும் ராயுடுவின் ஆற்றலால் மீண்டது. 71 ரன்களில் ராயுடு அவுட் ஆன நிலையில் அடுத்து தோனிதான் ஆடவந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக ஜடேஜாவையும், இளம் வீரர் சாம் கரணையும் களம் இறக்கினார்.
அடுத்ததாக பேட்டிங் செய்ய தோனி பின்னால் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஆவேசமாக பேட்டைச் சுழற்ற, 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களைக் குவித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
இதே வேகத்தில் சென்னை அணியை ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி தோனி வழிநடத்துவார் என்று எதிர்பார்ப்போம்.
