விமானத்தைக் கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை!
பங்களாதேஷிலிருந்து துபாய் சென்று கொண்டிருந்த விமானத்தை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட பயணி, வங்கதேச சிறப்பு படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சிட்டாகாங்கில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பின் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக அந்த பயணி எச்சரித்தப்பின் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டார்.
‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ விமானத்தின் BG147 விமானத்தில் இருந்த 148 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
சந்தேக நபர் விமானத்தை கடத்த முயன்றதற்கான காரணம் தெரியவில்லை.
“25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் சுடப்பட்டபின் முதலில் காயமடைந்தார், பின் அவர் உயிரிழந்தார்” என இராணுவத்தினர் தெரிவித்தனர்.
“நாங்கள் அவரை கைது செய்யவோ அல்லது சரணடைய வைக்கவோதான் முயற்சி செய்தோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். எனவே, நாங்கள் அவரை சுட்டு விட்டோம்” என ராணுவ மேஜர் ஜென் மோடியூர் ரகுமான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். அவரிடம் துப்பாக்கி இருந்தது. அதனை தவிர அவரிடம் ஒன்றும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கடற்கரை நகரான சிட்டாகாங்கிற்கு செல்லும் மேற்கொள்ளும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பேச வேண்டும் என கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
