Local

தீமையைப் போக்கும் தீபத்திருநாளை அர்த்தபுஷ்டியோடு கொண்டாடுவோம்! – வாழ்த்துச் செய்தியில் மைத்திரி

“தீமையைப் போக்கும் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடும் அர்த்தபுஷ்டியோடும் கொண்டாடுவோம்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பொறுமை, அடக்கம், அறிவு, ஆன்மீகம் போன்ற நற்பண்புகள் மனித மனங்களில் குடிகொள்ள வேண்டுமாயின் அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும். அந்த இலக்கை அடையும் வகையில் ஒளித் தீபங்களை ஏற்றி உலகவாழ் இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஒளி தரும் தீபங்களால் தீமை எனும் இருள் அகன்று நன்மையேனும் ஒளி எழுவதைப் போல் வாழ்க்கையிலும் ஒளி எழ வேண்டும் என்பதையே தீபாவளி பண்டிகை குறித்து நிற்கின்றது. அத்தோடு ஒருவருக்கொருவர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து அன்பை பரிமாறிக் கொள்ளும் ஒரு கலாசார நிகழ்வாக இத் தீபத்திருநாள் உலக மக்களை அன்பினால் இணைக்கின்றது.

பல தசாப்தங்களாக பகைமையினால் ஏற்பட்ட பல்வேறு வேதனைகளைச் சுமந்து நிற்கும் ஒரு சமூகம் என்ற வகையில், இனங்களுக்கு இடையேயான பகைமையை நீக்கி புரிந்துணர்வையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதன் மூலமே நாடும் மக்களும் நலம் பெறுவர் என்பதை நமது சமூகம் மிக நன்றாக உணர்ந்திருக்கும் இத்தருணத்தில் மலரும் தீபாவளி பண்டிகை நம்மவர்களுக்கிடையிலான கலாசார பந்தத்தை உறுதிப்படுத்திக் கொள்ளக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும் என்பதே எனது எண்ணமாகும்.

தீமையைப் போக்கும் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடும் அர்த்தபுஷ்டியோடும் கொண்டாடும் அதேவேளை, அதன்மூலம் அன்பையும் நற்பண்புகளையும் வளர்க்க முயற்சிக்கும் நம்மவர்களுக்கும் உலக வாழ் இந்துக்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading