Local

மைத்திரி, ரணில், கோட்டா ஆகிய மூன்று கூட்டுக்களவாணிகளையும் தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும்! – அநுர வலியுறுத்து

“மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய மூவரும் கூட்டுக்களவாணிகளாவர். இவர்கள் மூவரையும் தமிழர்கள் தோற்கடித்தே ஆகவேண்டும்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

‘ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் நான்தான். இருப்பினும், எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பேன்’ என்று பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச என்பது உறுதியாகிவிட்டது. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பது அவரின் வாயில் இருந்து வெளிவரும் கருத்துக்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதித் தேர்தலில் தனித்துக் களமிறங்கவுள்ளது என்று அதன் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டால் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனதான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார்.

இந்த மூன்று கட்சிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் கூட்டுக்களவாணிகளாவர். இவர்கள் மூவரையும் தமிழ் மக்கள் தோற்கடிக்க ஆகவேண்டும்.

சிங்கள மக்கள் இவர்கள் மூவரையும் நிராகரித்து ‘தேசிய மக்கள் சக்தி’க்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் தமிழ் மக்களிடம் இந்த வேண்டுகோளை நான் விடுக்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading